பாசன சங்கங்களை உடனடியாக பதிவு செய்து குடிமராமத்து பணிகளை தொடங்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்


பாசன சங்கங்களை உடனடியாக பதிவு செய்து குடிமராமத்து பணிகளை தொடங்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 8 July 2019 4:00 AM IST (Updated: 8 July 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் பாசன சங்கங்களை உடனடியாக பதிவு செய்து கொண்டு குடிமராமத்து பணிகள் தொடங்க வேண்டும் என கலெக்டர் ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள வேப்பத்தாங்குடி ஊராட்சிக்குட்பட்ட வஞ்சியூர் கிராமத்தில் குடிமராமத்து பணிகள் தொடர்பாக விவசாயிகள் மற்றும் பாசனதாரர்கள் சங்க உறுப்பினர்களிடம் கலந்துரையாடல் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் கலந்து கொண்டு விவசாயிகள், பாசனதாரர் சங்க உறுப்பினருடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் ஆகியவற்றை தூர்வாருதல், பழுதடைந்த கட்டுமானங்களை புனரமைத்தல், அடைப்பு பலகைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் குடிமராமத்து பணிகளாக மேற்கொள்ளப்பட உள்ளது. குடிமராமத்து பணிகள் மூலம் பயன்பெறும் விவசாயிகள் பாசனதாரர் சங்கம் அமைத்து நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் 51 சதவீதற்கு மேல் உள்ள உறுப்பினர்களை கொண்ட பாசனதாரர் சங்கத்தை பதிவு செய்து கொண்டு உடனடியாக குடிமராமத்து பணிகளை தொடங்க வேண்டும். விவசாயிகள் நலனுக்காக தமிழக அரசு இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து வேப்பத்தாங்குடி ஊராட்சிக்குட்பட்ட வஞ்சியூர் கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் வஞ்சியூர் அணையின் கட்டுமான பகுதிகளை சீரமைப்பது மற்றும் ஏடையார் வடிகால் படுகை 3,500 மீட்டர் வரை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி ஆகியவைகள் ரூ.27 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளதையொட்டி ஏடையார் வாய்க் கால் தூர்வாரப்பட உள்ளதை பார்வையிட்டு, பணிகள் எப்போது தொடங்கப்பட உள்ளது என்பது குறித்து விவசாயிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

இதில மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டைசெல்வம், உதவி கலெக்டர் முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story