காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 7 July 2019 10:45 PM GMT (Updated: 7 July 2019 10:13 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து கலந்தாய்வுகூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது.

வாலாஜாபாத்,

தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிரூட்டும் வகையில் தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி தமிழகத்தில் முதல்முறையாக காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கு உட்பட்ட மணிமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியை விவசாயிகள் முன்னிலையில் முதல்-அமைச்சர் பழனிசாமி குடிமராமத்து பணி திட்டத்தை தொடங்கி வைத்தார். காஞ்சீபுரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக ரூ.4 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 42 ஏரிகள் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டது.

இதனையடுத்து 2-வது கட்டமாக ரூ.6½ கோடி செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 27 ஏரிகளும் 2 வாய்க்கால்களும் விவசாய சங்கங்கள் மூலம் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து 3-வது கட்டமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.15 கோடியே 22 லட்சம் செலவில் 38 ஏரிகளில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆரம்பிக்கப்பட்டுள்ள குடி மராமத்து பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் காஞ்சீபுரத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் குடிமராமத்து பணிகளின் கீழ் ஏரிக்கரைகளில் உள்ள செடிகளை அகற்றி தூர்வாரி கரைகளை பலப்படுத்தி, ஆழப்படுத்தும் பணி உள்ளிட்டவற்றை சிறப்பாக மேற்கொள்வது குறித்து பொதுப்பணித்துறை வருவாய்த்துறை மற்றும் 38 ஏரி பாசன சங்கங்களின் உறுப்பினர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்த பணிகள் மூலம் 4,971.70 ஹெக்டேர் நிலங்கள்பாசன வசதி பெற உள்ளது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் சார் ஆட்சியர் சரவணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன், மகேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story