ஆம்பூர் அருகே, போர்வெல் லாரி மீது மற்றொரு லாரி மோதல், மரக்காணம் வாலிபர் உள்பட 2 பேர் பலி - டிரைவர் படுகாயம்
ஆம்பூர் அருகே நின்றுகொண்டிருந்த போர்வெல் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் மரக்காணம் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் டிரைவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ஆம்பூர்,
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தாலுகா ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 28). இவர், புதுச்சேரியில் இருந்து லாரியில் ஷூக்கள் உற்பத்தி செய்ய பயன்படும் சோல்களை ஏற்றிக் கொண்டு ஆம்பூருக்கு வந்து கொண்டிருந்தார். லாரியை டிரைவர் ரமேஷ் என்பவர் ஓட்டி வந்தார். அஜித் (27) என்பவரும் அந்த லாரியில் வந்துள்ளார்.
ஆம்பூர் அருகே உள்ள சின்னகொம்மேஸ்வரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென சாலையோரம் நின்று கொண்டிருந்த போர்வெல் லாரி மீது சோல் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பாலாஜி, அஜித் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் லாரி டிரைவர் ரமேஷ் படுகாயம் அடைந்தார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான பாலாஜி, அஜித் ஆகியோரின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story