வாணியம்பாடியில் துணிகரம் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் ரூ.35 லட்சம் நகை, பணம் கொள்ளை தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் பீதி


வாணியம்பாடியில் துணிகரம் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் ரூ.35 லட்சம் நகை, பணம் கொள்ளை தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 9 July 2019 4:45 AM IST (Updated: 8 July 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டின் கதவு, ஜன்னலை உடைத்து புகுந்த கொள்ளையர்கள் ரூ.35 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வாணியம்பாடி,

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் சி.என்.தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவர் வாணியம்பாடி பஜாரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை இவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. ஜன்னல் கம்பிகளும் வளைக்கப்பட்டிருந்ததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து வெளியூரில் இருந்த வடிவேலுவுக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக வடிவேல் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பினார். உள்ளே சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. சுவரில்பதிக்கப்பட்ட அந்த பீரோ பல பிரிவுகளாக உள்ளது. ஒவ்வொரு பிரிவாக திறந்து அவற்றில் இருந்த மொத்தம் 52 பவுன் நகை மற்றும் ரூ.23 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் கொள்ளையர்கள் எடுத்துச்சென்று விட்டனர்.

இது குறித்து வாணியம்பாடி நகர போலீஸ் நிலையத்தில் வடிவேல் புகார் அளித்தார். அதன்பேரில் வாணியம்பாடி நகர போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து பீரோ மற்றும் உடைக்கப்பட்ட கதவு, ஜன்னலில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

வடிவேல் வெளியூருக்கு சென்றிருந்ததை அறிந்து கொள்ளையர்கள் அவரது வீட்டை குறிவைத்து இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இவரது வீட்டிலிருந்து 2-வது தெருவில்தான் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மதுவிலக்கு பிரிவு போலீஸ் அலுவலகம் உள்ளது. எனவே இந்த பகுதி போலீசாரின் தீவிர கண்காணிப்புக்கு உட்பட்ட பகுதியாகவே விளங்குகிறது. பகலிலும், இரவிலும் அடிக்கடி போலீசார் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களது கண்காணிப்பை மீறி கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.35 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது.

கொள்ளை நடந்த வீட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் நேற்று மாலை வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

வாணியம்பாடி அருகே ஜோலார்பேட்டை பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்க் அதிபரை தாக்கி மர்ம நபர்கள் பணத்தை பறித்துச்சென்றனர். அங்கும் 3 வார இடைவெளிக்குள் 2 இடங்களில் கொள்ளை நடந்துள்ளது. கண்காணிப்பு கேமராவிலும் கொள்ளையர்கள் உருவம் பதிவாகியுள்ளது. அவர்கள் யார் என்பதை கண்டறிந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

அதன்பின்னரும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தாததன் காரணமே இப்போது வாணியம்பாடியில் அதுவும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் அருகிலேயே கொள்ளை நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கொள்ளை நடந்த வடிவேல் வீடு உள்ள பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சியையும் போலீசார் ஆய்வு செய்து வருவதோடு கொள்ளை நடந்த வீட்டின் அருகே வசிப்பவர்களிடமும் மர்மநபர்கள் நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இனியாவது போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story