அந்தியூர் அருகே தீ விபத்து: 3 வீடுகள் தீயில் எரிந்து நாசம்


அந்தியூர் அருகே தீ விபத்து: 3 வீடுகள் தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 9 July 2019 4:00 AM IST (Updated: 9 July 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே நடந்த தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம் ஆனது.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பி பாளையத்தில் ராஜேந்திரன் என்பவர் செங்கல்சூளை வைத்து நடத்தி வருகிறார். இந்த சூளையில் உள்ள 3 சிமெண்டு ஓடு வேயப்பட்ட வீடுகளில் வெளியூரை சேர்ந்த மணி, ராஜேந்திரன், சின்னப்பன் என்ற 3 பேரும் தங்களுடைய குடும்பத்துடன் தங்கி சூளையில் வேலை பார்த்து வந்தார்கள்.

நேற்று காலை வழக்கம்போல் 3 வீடுகளில் தங்கியிருந்தவர்களும் செங்கல் சூளையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது திடீரென வீடுகளில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் 3 வீடுகளும் கொழுந்துவிட்டு எரிந்தன.

தீ எரிவதை பார்த்து, செங்கல் சூளையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர்களும், அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றார்கள். உடனே அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தார்கள். ஆனால் அதற்குள் பொதுமக்களே தீயை அணைத்து விட்டார்கள்.

இந்த தீவிபத்தில் 3 வீடுகளில் இருந்த பீரோ, கட்டில், மின்விசிறி, துணிகள், உணவு பொருட்கள் எரிந்து நாசம் ஆகிவிட்டன. கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தம் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தை பார்த்து சேத மதிப்பை ஆய்வு செய்தார்கள். மேலும் அந்தியூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story