பள்ளி அருகே புதர் மண்டி கிடந்த குளத்தை சுத்தம் செய்த மாணவர்களின் பெற்றோர் கிராம மக்கள் பாராட்டு


பள்ளி அருகே புதர் மண்டி கிடந்த குளத்தை சுத்தம் செய்த மாணவர்களின் பெற்றோர் கிராம மக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 8 July 2019 10:45 PM GMT (Updated: 8 July 2019 6:36 PM GMT)

பள்ளி அருகே புதர் மண்டி கிடந்த குளத்தை மாணவர்களின் பெற்றோர் ஒன்று சேர்ந்து சுத்தம் செய்தனர். இதனை கிராம மக்கள் பாராட்டினர்.

திருத்துறைப்பூண்டி,

தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆறுகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. மழை பெய்தாலும் தண்ணீர் தேங்க முடியாத அளவுக்கு குளங்கள் புதர் மண்டி காடு போல காட்சி அளிக்கின்றன. நீர்நிலைகளின் நிலை பரிதாபமாக உள்ள நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மருதவனம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள ஒரு குளத்தை மாணவர் களின் பெற்றோர் ஒன்று சேர்ந்து சுத்தம் செய்து உள்ளனர்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

மருதவனம் உயர்நிலைப்பள்ளியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் அருகே உள்ள கருங்குளம், புதர் மண்டி கிடந்தது. குளத்தில் குப்பைகள் தேங்கி கிடந்தன. தண்ணீர் தேங்க வழியின்றி அலங்கோலமான நிலையில் கருங்குளம் இருந்தது.

பள்ளி அருகே உள்ள குளம் அசுத்தமான நிலையில் காட்சி அளிப்பது அந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது. இதையடுத்து குளத்தை சுத்தப்படுத்த பெற்றோர் முடிவு செய்தனர்.

அதன்படி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெங்கடாசலம், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராணி, உதவி தலைமை ஆசிரியர் சுஜாதா, சுத்தம் செய்யும் பணியின் ஒருங்கிணைப்பாளர் அமுதாசெல்வி ஆகியோர் முன்னிலையில் குளத்தை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது.

இதில் குளத்தில் மண்டியிருந்த புதர்கள் அகற்றப்பட்டன. அதேபோல பள்ளி வளாகத்தில் இருந்த முட்செடிகளும் அகற்றப்பட்டு, மரக்கன்றுகளை நட்டு தோட்டம் அமைக்கப்பட்டது.

தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி அருகே குளத்தை சுத்தம் செய்ய முன்வந்த பெற்றோரை அப்பகுதி கிராம மக்கள் பாராட்டினர். 

Next Story