புயலால் சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


புயலால் சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 8 July 2019 10:30 PM GMT (Updated: 8 July 2019 6:38 PM GMT)

புயலால் சேதமடைந்த ஆதிச்சபுரம் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்டூர்,

கோட்டூர் அருகே உள்ள ஆதிச்சபுரத்தில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்திற்கு தினமும் 15 குழந்தைகள் வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு (2018) வீசிய கஜா புயலினால் அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை, கதவுகள் ஆகியவை சேதமடைந்தன.

மேலும் இங்குள்ள குடிநீர் தொட்டியும் சேதடைந்தது. அதேபோல புயலால் சாய்ந்து விழுந்த தென்னை மரங்கள் உள்ளிட்ட மரங்கள் இன்னும் அகற்றப்படாமல் அங்கன்வாடி மையத்தை சுற்றி கிடக்கின்றன.

மின் இணைப்பு

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

ஆதிச்சபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையம் கஜா புயலினால் சேதமடைந்தது. புயல் தாக்கி இவ்வளவு நாட்கள் ஆகியும் இன்னும் சீரமைக்கப்படவில்லை. அதேபோல புயலுக்கு பிறகு இன்னும் இந்த கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் குழந்தைகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். குடிநீர் தொட்டியை பழுது பார்க்காததால் தண்ணீர் நிரப்ப முடியாத நிலை நிலவுகிறது. மேலும் கட்டிடத்தை சுற்றி சாய்ந்து விழுந்த மரங்கள் இன்னும் அப்புறப்படுத்தப்படாமல் கிடப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷபூச்சிகள், கட்டிடத்திற்குள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

நடவடிக்கை

எனவே சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு சீரமைக்க வேண்டும். மேலும் அங்கன்வாடி மையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சார வசதி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story