தாராபுரம் அருகே அரசு பஸ்சில் சென்ற மாணவிகளை சொந்த ஊரில் இறக்கி விடாததால் கண்டக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
தாராபுரம் அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது அரசு பஸ்சில் சென்ற மாணவிகளை சொந்த ஊரில் இறக்கி விடாததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கண்டக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாராபுரம்,
தாராபுரம் சர்ச் ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில், மங்களாம்பாளையத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் படித்து வருகிறார்கள். இந்த மாணவிகள் அனைவரும் தினமும் பஸ்சில் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம். நேற்று வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் மங்களாம்பாளையத்தை 5 மாணவிகளும், அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் கோகிலா என்பவரும், தாலுகா அலுவலகம் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்திற்கு சென்றுள்ளனர். சுமார் மாலை 4.30 மணிக்கு ஈரோட்டிலிருந்து தாராபுரம் வழியாக பழனிக்குச் செல்லும் அரசு பஸ் ஒன்று அங்கு வந்துள்ளது.
மாணவிகள் பஸ்சை நிறுத்தி, அதன் கண்டக்டர் ராம்நாத் என்பவரிடம், பஸ் மக்களாம்பாளையம் பிரிவில் நிற்குமா? என்று கேட்டுள்ளனர். அதற்கு கண்டக்டர் பஸ் நிற்கும் என்று சொன்னதால், மாணவிகளும், ஆசிரியையும் பஸ்சில் ஏறியுள்ளனர். அரசு பஸ் பழனிசாலையில் மங்களாம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது. மாணவிகள் எழுந்து கண்டக்டரிடம் பஸ்சை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
கண்டக்டர் கண்டுகொள்ளாமல் இருந்ததால், பஸ் மங்களாம்பாளையம் பிரிவை தாண்டி சென்றுவிட்டது. கண்டக்டரின் செயல்பாட்டை கண்டு, அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பஸ்சை உடனே நிறுத்தச் சொல்லி பஸ்சுக்குள் சத்தம் போட்டுள்ளனர். இந்த நிலையில் பஸ் மங்களாம்பாளையம் பிரிவை தாண்டி, சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொல்லபட்டி பிரிவிற்கு சென்றுவிட்டது.
அப்போது கண்டக்டர் பஸ்சை நிறுத்தி மாணவிகளையும், ஆசிரியையும் இறங்க சொல்லி இருக்கிறார். அதற்கு மாணவிகள் எங்களிடம் பணம் இல்லை. மேலும் மணி 5.45 ஆகி விட்டது. சொந்த ஊருக்கு செல்வதற்குள் இருட்டாகிவிடும். எங்களால். தனியாக நடந்து செல்லமுடியாது என்று கூறி அழுதுள்ளனர். அதற்கு கண்டக்டர் நான் ஒன்றும் செய்ய முடியாது என்று அலட்சியமாக சொல்லிவிட்டு விசில் அடித்துள்ளார். உடனே பஸ் வேகமாக செல்ல தொடங்கிவிட்டது. கண்டக்டரின் இந்த தவறான செயலை கண்ட ஆசிரியை, தனது செல்போன் மூலம் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். பிறகு மாணவிகளின் பாதுகாப்பு கருதி, அவர்களுடன் பஸ்சில் சென்றுள்ளார். அதன் பிறகு அரசு பஸ் மாணவிகளுடன் பழனி பஸ் நிலையத்திற்குச் சென்றுவிட்டது.
உடனே அரசு பஸ் கண்டக்டரின் இந்த செயல்பாட்டை கண்டித்து, மங்களாம்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தாராபுரம்–பழனி சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் அரசு பஸ் நிறுத்தாமல் சென்றதை கண்டித்ததோடு,. மாணவிகளையும் ஆசிரியையும், அதே அரசு பஸ்சில் ஏற்றி, மீண்டும் மங்களாம்பாளையத்திற்கு கொண்டு வந்துவிட வேண்டும். இல்லையேல் சாலை மறியல் தொடரும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
அதன் பிறகு சாலை மறியல் நீடித்தது. சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு அதே அரசு பஸ்சில் மாணவிகளும், ஆசிரியையும் பழனியிலிருந்து மங்களாம்பாளையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதன் பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது மங்களாம்பாளையம் பிரிவில் பஸ் நிறுத்தாமல் சென்றதால் மறியலில் ஈடுபட்டோம். அரசு பஸ்சின் கண்டக்டர் மற்றும் ஒட்டுனர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.