இந்திய குடியுரிமை கேட்டு இலங்கை அகதிகள் கலெக்டரிடம் மனு


இந்திய குடியுரிமை கேட்டு இலங்கை அகதிகள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 8 July 2019 10:15 PM GMT (Updated: 8 July 2019 7:09 PM GMT)

இந்திய குடியுரிமை கேட்டு கெலவரப்பள்ளி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி,

ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் வசிக்க கூடிய மக்கள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் பிரபாகரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் இலங்கையில் ஏற்பட்ட போரின் காரணமாக கடந்த 1990-ம் ஆண்டு இந்தியா வந்தோம். தற்போது ஓசூர் தாலுகா கெலவரப்பள்ளி அணை இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகிறோம். இங்கு சுமார் 143 குடும்பத்தை சேர்ந்த 522 பேர் வசித்து வருகிறோம்.

இதில் 200-க்கும் மேற்பட்டோர் கூலி வேலைக்கு சென்று வருகிறோம். அத்துடன் 80 மாணவர்கள் பள்ளிக்கும், 15 மாணவர்கள் கல்லூரிக்கும் சென்று வருகின்றனர். 15 பேர் கல்லூரி படிப்பையும் முடித்துள்ளனர். மேலும், நாங்கள் தமிழக அரசு கொடுக்கும் உதவிகளை பெற்றுக்கொண்டு 29 வருடங்களாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு, தமிழக மக்களுடன் வாழ்ந்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் அகதி முகாமிலேயே நாங்கள் கால் நூற்றாண்டுக்கு மேல் இருந்துவிட்டதால், இங்கேயே நாங்களும் மற்றும் எங்களது குழந்தைகளும் இந்த மண்ணில் வாழ்க்கையை தொடருவதற்கு ஏற்ப எங்களுக்கு இந்திய குடியுரிமை அல்லது இரட்டை குடியுரிமை வழங்க தாங்கள் ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story