புதுக்கோட்டையில் ரூ.25 லட்சத்தில் நகராட்சி பூங்கா அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்


புதுக்கோட்டையில் ரூ.25 லட்சத்தில் நகராட்சி பூங்கா அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 9 July 2019 4:30 AM IST (Updated: 9 July 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் ரூ.25 லட்சத்தில் நகராட்சி பூங்காவை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சியில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு நகராட்சி பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், புதுக்கோட்டை நகராட்சி, சாந்தநாதபுரத்தில் 2 சிறுமின் விசை இறைப்பான்கள், ராஜகோபாலபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.11 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம், புதுக்கோட்டை சார்லஸ்நகரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நகராட்சி பூங்கா என மொத்தம் ரூ.39 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதிதாக திறக்கப்பட்ட நகராட்சி பூங்காவில் பெரியவர்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் 8 வடிவ நடைபாதை, குழந்தைகள் விளையாட நவீன விளையாட்டு உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் நலனுக்கான வளர்ச்சித்திட்ட பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். எனவே பொதுமக்கள் இதனை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இதில் எம்.எல்.ஏ.க்கள். ஆறுமுகம், ரத்தினசபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கந்தர்வகோட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு சுற்றுச்சுவர் பணிக்கான பூமி பூஜையும் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபின் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாது:-

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. குழந்தைகள் நலன், விபத்து சிகிச்சைப் பிரிவு, தொற்றுநோய் மற்றும் தொற்றா நோய்கள் பிரிவு, 108 ஆம்புலன்ஸ் சேவை, மனநல மருத்துவம் உள்ளிட்ட முக்கியமான சுகாதாரத்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் முழுகவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையில் இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் 2 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் ஒரு திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதலுடன் ரூ.2 ஆயிரத்து 884 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டத்தை முதல்-அமைச்சர் அடுத்த மாதம் தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் 2 என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story