அன்னவாசல் பகுதியில் கடும் வறட்சியால் தண்ணீரின்றி கருகிய தென்னை மரங்கள் விவசாயிகள் கவலை


அன்னவாசல் பகுதியில் கடும் வறட்சியால் தண்ணீரின்றி கருகிய தென்னை மரங்கள் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 9 July 2019 4:15 AM IST (Updated: 9 July 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் பகுதியில் கடும் வறட்சியால் தண்ணீரின்றி கருகிய தென்னை மரங்களால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை. மேலும் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் ஓடைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் தற்போது கடும் வறட்சியால் வறண்டு விளையாட்டு மைதானமாக காணப்படுகிறது.

இந்நிலையில் அன்னவாசல் இலுப்பூர், வீரப்பட்டி, தாண்றீஸ்வரம், காலாடிப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, புதூர், காட்டுப்பட்டி, குளவாய்ப்பட்டி, குடுமியான்மலை, அண்ணாபண்ணை, வயலோகம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் எளிதில் காய்ந்து விடாதவையாக கருதப்படும் தென்னை மரங்கள் கூட கடும் வெப்பத்தாலும், வறண்ட வானிலை தொடர்வதாலும் இதுவரை பலன் தந்த தென்னைகள் கருகி காணப்படுகிறது.

ஊடுபயிர்கள் நடவு செய்ய

வறட்சியின் கொடுமையால் வேறு வழியின்றி விவசாயிகள் தோப்பில் உள்ள தென்னைகளை வெட்டி அகற்றி வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வருகிற ஆண்டில் தென்னந்தோப்புகளை அழித்து வறட்சியை தாங்கும் பயிர்களை நடவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், ஊடுபயிர்களை நடவு செய்ய தொடங்க போவதாகவும் விவசாயிகள் கூறினர்.

இதுகுறித்து வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் கூறியதாவது:-

எனது தோட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் இருந்தன. 40 அடி ஆழ கிணறு உள்ளது. கிணற்றில் சுத்தமாக தண்ணீர் இல்லை. மழை பொழிவும் இல்லை. இதனால் தென்னைக்கு கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. காலப்போக்கில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் வேர் முதல் உச்சி வரை தென்னை மரங்கள் முற்றிலுமாக காய்ந்து விட்டன. பொதுவாக தென்னை மரங்கள் நீர் இல்லாவிட்டாலும் எளிதில் காயாது. ஆனால் தற்போது நிலவும் கடும் வறட்சியால் தென்னைகள் முற்றிலுமாக காய்ந்து விட்டன என்று வேதனையுடன் கூறினார்.

Next Story