மாவட்ட செய்திகள்

2020-ம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் மத்தியக்குழு அதிகாரி தகவல் + "||" + Central Committee Official Information to Provide Drinking Water to All People by 2020

2020-ம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் மத்தியக்குழு அதிகாரி தகவல்

2020-ம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் மத்தியக்குழு அதிகாரி தகவல்
2020-ம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என மத்தியக்குழு அதிகாரி உமாசுரேஷ் தெரிவித்தார்.
கரூர்,

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டத்தை சேகரிக்கும் வகையிலும், மழைநீர் சேகரிப்புக்கான வழிவகையினை மேற்கொள்ளவும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மத்திய அரசின் சார்பில் கதர் மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் நிதி ஆலோசகர் மற்றும் இணைசெயலாளருமான உஷா சுரேஷ் தலைமையிலான “ஜல் சக்தி அபியான்” குழுவினர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று அனைத்துத்துறை அலுவலர் களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். இந்த குழுவில் மத்திய அரசின் பெருநிறுவன விவகாரத்துறையின் துணை செயலாளர் வைத்தீஸ்வரன், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துணை செயலாளர் அச்சுட்டியா நந்த் ஜெனா, தேசிய நீர் மேம்பாட்டு ஆணையத்தின் துணை இயக்குநர் கிருஷ்ணா ரெட்டி, வணிகவியல் துறை துணை செயலாளர் வெங்கடாஜலபதி, புனேவில் உள்ள மத்திய நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானி புரோகித், தேசிய நீர் நிலை நிறுவனத்தின் விஞ்ஞானி ராஜேஸ்சிங் ஆகிய அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.


இந்த கூட்டத்தில் கரூர் மாவட்டம் முழுவதும் நகரம் மற்றும் ஊரகப்பகுதிகளில் நீர்மேலாண்மை குறித்தும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதும், நீர்நிலைகளை மேம் படுத்துவதும் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலமாக ஏரி, குளங்களை துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது, மரக்கன்றுகள் நடுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், தன்னார்வலர்களை ஈடுபடுத்தி நீர்நிலைகளை தூர்வாரவும், கரைகளை பலப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து துறைகளும் டிசம்பர் மாதத்திற்குள் தங்கள் பகுதியில் உள்ள ஏரிகள், ஊரணிகள், குளங்கள், குட்டைகள் ஆகியவற்றில் நீர் தேக்குவதற்கான பணிகளை மேற்கொள்ளவும் அதிகப்படியான நீர் தேங்கும் இடங்களில் தடுப் பணைகள், பண்ணை குட்டைகள் உள்ளிட்டவை அமைத்து தேக்கி வைக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாத்து நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்கு தேவையான மூன்றாண்டு திட்டமிடல் அறிக்கையினை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தயாரித்து அளிக்க வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் மத்திய குழுவின்சார்பில் கதர் மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் நிதி ஆலோசகர் மற்றும் இணைச்செயலாளர் உஷா சுரேஷ் பேசியதாவது:-

கரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். ஒவ்வொரு சொட்டு நீரை சேமிக்க வேண்டும் என்பதை நோக்கி அடுத்தகட்ட திட்டங்களை வகுக்க உள்ளோம். கரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ள பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி நிலத்தடி நீரை செறிவூட்டவும், மழை நீரை சேமிக்கவும் நீண்ட காலத்திற்கு நீர்ப்பற்றாக்குறை வராத அளவிற்கு திட்டங்களை வகுத்து மத்திய அரசிற்கு பரிந்துரைக்க உள்ளோம். அனைத்து அரசுக்கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிக்கும் அமைப்பு உள்ளதை உறுதிசெய்து, தனியார் வீடுகளிலும் இந்த அமைப்பை வைக்க வலியுறுத்துவோம். பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் மற்றும் பொது கிணறுகள் ஆகியவற்றில் மழைநீர் சேகரிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யவும் தேவையான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த குழுவின் முதல்கட்ட ஆய்வு செப்டம்பர் 13-ந்தேதி வரையிலும், இரண்டாம் கட்ட ஆய்வு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் நடைபெறவுள்ளது. டிசம்பர் இறுதியில் மத்திய அரசிற்கு நீர்மேலாண்மைக்கு தேவைப்படும் திட்டங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம். 2020-ஆம் ஆண்டிற்குள் அனைத்து மக்களுக்கும் தேவையான குடிநீர் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாகும். இப்போது எடுக்கும் இந்த நடவடிக்கையால் இன்னும் 5 வருடங்களுக்கு குடிநீர் பிரச்சினை இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உமாசங்கர், நகராட்சிகளின் ஆணையர்கள், பேரூராட்சிகளின் செயல் அதிகாரிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், அனைத்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து மணல்மேடு ஜவுளிபூங்காவில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து தாவரங்களுக்கு பயன்படுத்தும் அமைப்பு மற்றும் மூக்கணாங்குறிச்சியில் கட்டப்பட்ட தடுப்பனை உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு அந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை