புதுச்சேரிக்கான இடஒதுக்கீட்டில் தமிழக மாணவி ஜிப்மரில் இடம் பெற்றார்; கலெக்டரிடம் புகார்


புதுச்சேரிக்கான இடஒதுக்கீட்டில் தமிழக மாணவி ஜிப்மரில் இடம் பெற்றார்; கலெக்டரிடம் புகார்
x
தினத்தந்தி 9 July 2019 5:00 AM IST (Updated: 9 July 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் தமிழக மாணவி இடம் பெற்றுள்ளார் என்று ஆதாரத்துடன் மாணவர், பெற்றோர் நலசங்க தலைவர் வை.பாலா கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் புதுவை மாநில இடஒதுக்கீட்டில் போலி சான்றிதழ்கள் மூலம் பிற மாநில மாணவர்கள் சேர்வதாக ஆண்டுதோறும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பிற மாநில மாணவர்கள் அந்தந்த மாநிலங்களில் நீட் தேர்வினை எழுதி, ஜிப்மர் கல்லூரியில் சேர மட்டும் புதுவை மாநில சான்றிதழ் பெற்று தேர்வுகளை எழுதியதாக புகார்கள் எழுந்தன.

இவ்வாறு தேர்வு எழுதியவர்களில் பலர் தரவரிசை பட்டியலிலும் முன்னிலையில் இருந்தனர். அவர்கள் வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதியதற்கான ஆதாரங்களுடன் புதுவையை சேர்ந்த பல்வேறு சமூக அமைப்புகள் ஜிப்மர் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

அவ்வாறு தேர்வு எழுதியவர்கள் கலந்தாய்வுக்கு வந்தால் தடுப்போம் என்று மாணவர்கள் அமைப்புகளும் மிரட்டல் விடுத்தன. இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கலந்தாய்வும் நடந்தது.

மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக புகார்கள் எழுந்ததால் மாணவர்கள் சமர்ப்பித்த இருப்பிட சான்றிதழ்களை அதன் உண்மை தன்மையை அறிய ஜிப்மர் நிர்வாகம் கலெக்டருக்கு அனுப்பியுள்ளது.

இந்தநிலையில் புதுவை மாநில மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா கலெக்டருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் மாணவி ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் புதுவை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். அந்த மாணவியின் தந்தை புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் பணியாற்றி வருவதால், அதனடிப்படையில் காலாப்பட்டு கிராம நிர்வாக அதிகாரியிடம் புதுவையில் இருப்பதுபோல் சான்றிதழ் பெற்றுள்ளார்.

ஆனால் அந்த மாணவி நீட் தேர்வினை எழுதும்போது காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கத்தில் குடியிருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த மாணவி தந்தையின் பணியை இருப்பிடமாக கொண்டு புதுவைமாநில மாணவர்களுக்கான ஜிப்மர் இடத்தையும், தமிழகத்தை இருப்பிடமாக கொண்டு நீட் தேர்வினையும் எழுதியுள்ளார். ஒரே மாணவி இரட்டை குடியுரிமை பெற்று இருப்பது குற்றமாகும். இதுதொடர்பாக புகார் அளிக்கப்படும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாங்கள் உடனே தற்போது நடந்த தவறுகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த கடித்தில் வை.பாலா கூறியுள்ளார்.


Next Story