கோவில்பட்டியில் 556 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


கோவில்பட்டியில் 556 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 9 July 2019 3:30 AM IST (Updated: 9 July 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் 556 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி முன்னிலை வகித்தார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 556 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பிளஸ்-2 பயிலும் 23 ஆயிரத்து 312 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது. இதனை மாணவ-மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றார்.

விழாவில் நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிசெல்வம், செயலாளர் ஜெயபாலன், துணை தலைவர் செல்வராஜ், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் மாரியப்பன், தலைமை ஆசிரியர் வடிவேல், உதவி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி செயலாளர் கண்ணன், பொதுநல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து சண்முகசிகாமணி நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள புதிய ரேஷன் கடைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.

கோவில்பட்டி நகரசபையில் 2-வது குடிநீர் திட்டம் ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அங்கு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கூடுதலாக 10 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான தொடக்க விழா, கோவில்பட்டி நகரசபை அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். நகரசபை ஆணையாளர் அட்சயா வரவேற்று பேசினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதிய குடிநீர் இணைப்புகளை வழங்குவதற்காக பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். முதற்கட்டமாக வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி பொதுமக்கள் 100 மனுக்களை வழங்கினர்.

வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு கட்டணமாக ரூ.7 ஆயிரமும், வணிக நிறுவனங்களுக்கு புதிய குடிநீர் இணைப்பு கட்டணமாக ரூ.20 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிய குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு சாலை சீரமைப்பு பணி மற்றும் மேற்பார்வை கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் பரமசிவன், சின்னப்பன் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, நகரசபை என்ஜினீயர்கள் கோவிந்தராஜ், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story