திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு நிவாரணம் கேட்டு கம்பு பயிருடன் மூதாட்டி மனு


திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு நிவாரணம் கேட்டு கம்பு பயிருடன் மூதாட்டி மனு
x
தினத்தந்தி 8 July 2019 10:45 PM GMT (Updated: 8 July 2019 8:35 PM GMT)

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு இலவச செல்போன் கேட்டு பார்வையற்றவர்கள் வந்தனர். நிவாரணம் கேட்டு கம்பு பயிருடன் வந்து மூதாட்டி மனு கொடுத்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் நடந்தது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 576 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் திருச்சி மாவட்ட தேசிய பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கொடுத்த மனுவில், தஞ்சை, புதுக்கோட்டை, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் பார்வையற்றவர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல திருச்சி மாவட்டத்தில் உள்ள பார்வையற்றவர்களுக்கும் இலவச செல்போன் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் அதில் இடம் பெற்றிருந்தன.

முசிறி அருகே உள்ள திண்ணனூரை சேர்ந்த மூதாட்டி மூக்காயம்மாள்(வயது 85). இவர் தனது மகன் ஞானசேகருடன் கம்பு பயிருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் கொடுத்த மனுவில், எங்களது வயலில் 1 ஏக்கர் கம்பு பயிரிட்டு இருந்தேன். நன்கு விளைந்த நிலையில் உள்ள கம்பு பயிரை காட்டுப்பன்றி, குரங்கு, மயில் உள்ளிட்டவை வந்து முற்றிலும் அழித்து விட்டன. வனவிலங்குகள் மற்றும் பறவைகளால் அழிந்த பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ஸ்ரீரங்கம் 2-வது வார்டில் ஆத்தூர் ஸ்ரீராமனுஜர் கூடம் என்ற அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை அங்கு சமையல் வேலை செய்த பெண் ஒருவர் போலி உயில் எழுதி ஆக்கிரமித்து விட்டதாகவும், அதை மீட்கவும், அதற்கு துணைபோன அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

திருச்சி லால்குடி ஒன்றியம் சிவந்திநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட மயிலரங்கம் கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் வேலைசெய்யும் பெண்கள் கொடுத்த மனுவில், ‘கடந்த ஏப்ரல் மாதம் முதல் 250 பேருக்கு வேலை வழங்கவில்லை. ஆனால், குறிப்பிட்ட சிலரை மட்டும் வேலைக்கு அமர்த்தி கள பொறுப்பாளர் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். எனவே, அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Next Story