மும்பையில் மீண்டும் கனமழை, இயல்பு வாழ்க்கை முடங்கியது - விமான சேவை 20 நிமிடம் நிறுத்தப்பட்டது


மும்பையில் மீண்டும் கனமழை, இயல்பு வாழ்க்கை முடங்கியது - விமான சேவை 20 நிமிடம் நிறுத்தப்பட்டது
x
தினத்தந்தி 8 July 2019 11:30 PM GMT (Updated: 9 July 2019 12:12 AM GMT)

மும்பையில் மீண்டும் கனமழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பஸ், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் விமான சேவை 20 நிமிடம் நிறுத்தப்பட்டது.

மும்பை, 

மராட்டியத்தில் பருவமழை பெய்து வருகிறது. தீவிரம் அடைந்த பருவமழை கடந்த வாரம் 5 நாட்கள் விடாமல் வெளுத்து வாங்கியது. அப்போது மும்பையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த கனமழையால் நகரின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போனது.

கொட்டி தீர்த்த கனமழை கொத்து, கொத்தாக உயிர் பலியும் வாங்கியது. குறிப்பாக குர்லாவில் குடிசைகள் மீது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 28 பேர் பலியானார்கள். அதன்பின்னர் மழையின் தீவிரம் குறைந்தது.

இயல்பு நிலை திரும்பியிருந்த நிலையில், நேற்று மீண்டும் கனமழை பெய்தது. காலை நேரத்தில் இடைவிடாமல் பெய்த மழையால் 3 மணி நேரத்தில் மட்டும் 20 மி.மீ. மழையளவு பதிவானது. தொடர்ந்து பெய்த மழையால் மும்பை நகர் வெள்ளக்காடாக மாறியது. செம்பூர் திலக் நகர் ரெயில்வே காலனி, விக்ரோலி கன்னம்வார் நகர், கிங்சர்க்கிள், சயான், தாராவி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.

நவிமும்பையில் சயான்- பன்வெல் நெடுஞ்சாலையில் அதிகளவில் வெள்ளம் சூழ்ந்தது. சாலையோரத்தில் நின்ற கார்கள் வெள்ளத்தில் மிதந்தன. 37 பெஸ்ட் பஸ் சேவைகள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

ரெயில் தண்டவாளங்களை மழை வெள்ளம் சூழ்ந்ததால், மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் பரிதவித்தனர்.

அண்மையில் பெய்த கனமழையால் 3 நாட்கள் வரையிலும் பாதிக்கப்பட்டு இருந்த விமான சேவை நேற்றும் மழையால் போதிய வெளிச்சமின்மை காரணமாக பாதிக்கப்பட்டது. காலை நேரத்தில் 20 நிமிடம் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மும்பை நோக்கி வந்த சில விமானங்கள் வேறு விமான நிலை யங்களுக்கு திருப்பி விடப் பட்டன.

மழையின் போது கோவண்டி சிவாஜி நகரில் ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டில் இருந்த 8 பேர் காயம் அடைந்தனர். லால்பாக் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவர் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது. அந்த லாரி கீழே உள்ள சாலையில் விழுந்து இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்.

இதேபோல பக்கத்து மாவட்டங்களான தானே, பால்கர், ராய்காட்டிலும் மழை கொளுத்தியதால், அங்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நவிமும்பை நகரமும் வெள்ளத்தில் தத்தளித்தது.

மழையின் போது மும்பை- புனே வழித்தடத்தில் உள்ள தாக்குர்வாடி- மங்கிஹில் மலைப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், மலையில் இருந்து உருண்டு விழுந்த கற்கள் தண்டவாளத்தில் விழுந்தன. மழைநீரும் தண்டவாளத்தை சூழ்ந்தது. தகவல் அறிந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் கிடந்த மண், கற்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மும்பை- புனே இடையே நீண்டதூர ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது.

Next Story