மலாடு சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் சிக்கிய இளம்பெண் கடலில் பிணமாக மீட்பு - 20 கி.மீ. இழுத்து செல்லப்பட்ட பரிதாபம்


மலாடு சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் சிக்கிய இளம்பெண் கடலில் பிணமாக மீட்பு - 20 கி.மீ. இழுத்து செல்லப்பட்ட பரிதாபம்
x
தினத்தந்தி 9 July 2019 4:00 AM IST (Updated: 9 July 2019 5:42 AM IST)
t-max-icont-min-icon

மலாடு சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் சிக்கிய இளம்பெண் 20 கி.மீ. தூரத்தில் உள்ள வெர்சோவா கடலில் பிணமாக மீட்கப்பட்டார்.

மும்பை,

மும்பை மலாடு பிம்பிரிபாடாவில் கடந்த 2-ந் தேதி அதிகாலை 2 மணியளவில் மழையின் போது அங்குள்ள மலையடிவாரத்தில் உள்ள தடுப்புச்சுவர் இடிந்து அந்த பகுதியில் இருந்த குடிசை வீடுகள் மீது விழுந்தது. இந்த கோர விபத்தில் அன்றைய தினம் மட்டும் 21 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்கள் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 27 ஆக அதிகரித்தது. படுகாயம் அடைந்த சுமார் 70 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் அந்த பகுதியை சேர்ந்த சோனாலி (வயது24) என்ற இளம்பெண் மாயமானார். சுற்றுச்சுவர் இடிபாடுகளில் அவர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெர்சோவா கடல் பகுதியில் இளம்பெண் ஒருவரின் உடல் அழுகியநிலையில் மீட்கப்பட்டது. பிணமாக மீட்கப்பட்டவரின் கையில் சோனாலி என பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில், வெர்சோவா கடற்கரையில் மீட்கப்பட்டவர் மலாடு சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் மாயமான சோனாலி என்பது தெரியவந்தது.

சம்பவம் நடந்த மலாடு பகுதியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள வெர்சோவா கடற்கரையில் சோனாலி உடல் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சுற்றுச்சுவர் இடிந்து பலியான சோனாலியின் உடல் பாதாள சாக்கடையில் விழுந்து மலாடு கழிமுக பகுதிக்கு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம். பின்னர் அவரது உடல் வெர்சோவா கடல் பகுதிக்கு சென்று இருக்கலாம் என கூறினார்.

இளம்பெண் சோனாலி உடல் மீட்கப்பட்டதன் மூலம் மலாடு சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story