தமிழகம் முழுவதும் 18-ந்தேதி புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டம் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு


தமிழகம் முழுவதும் 18-ந்தேதி புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டம் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு
x
தினத்தந்தி 10 July 2019 4:00 AM IST (Updated: 9 July 2019 10:28 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.

பிராட்வே,

சட்டசபையில் சுகாதாரத்துறை மானிய கோரிக்கையின்போது அரசு மருத்துவர்களின் சம்பள உயர்வு, பணி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் 18-ந்தேதி தமிழகம் முழுவதும் புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.

சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனைத்து அரசு டாக்டர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அனைவரும் ஒன்றிணைந்த அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தினர்.

பின்னர், கடந்த ஒரு ஆண்டு காலமாக அரசு டாக்டர்களுக்கு பணி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்காததை கண்டித்தும், உடனடியாக சம்பளம் மற்றும் பணி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றினர்.

பின்னர் அரசு டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு டாக்டர்கள் சங்க மாநில அமைப்பாளர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு டாக்டர்களுக்கு பணி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்காததை கண்டித்து தமிழகம் முழுவதும், புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ள அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

அதன்படி 10-ந்தேதி(இன்று) சென்னை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய மண்டலங்களில் அடையாள உண்ணாவிரத போராட்டங்களும், 12-ந்தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தர்ணா போராட்டங்களும், 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்படும்.

மேலும் வருகிற 16-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ள சுகாதாரத்துறை மானிய கோரிக்கையில் அரசு மருத்துவர்களின் சம்பள உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவேண்டும்.

இல்லாவிட்டால் 18-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story