மஞ்சூர் அருகே, தனியார் தேயிலை எஸ்டேட் அலுவலகம் முற்றுகை
மஞ்சூர் அருகே தனியார் தேயிலை எஸ்டேட் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
மஞ்சூர்,
மஞ்சூர் அருகே உள்ள தாய்சோலை பகுதியில் தனியார் தேயிலை எஸ்டேட் ஒன்று உள்ளது. இங்குள்ள தேயிலை தொழிற்சாலையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இந்த தேயிலை எஸ்டேட்டில் பணி புரிந்து வரும் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் உரிய காலத்தில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்புநிதி, ஆயுள் காப்பீடு, கூட்டுறவு கடன் சங்க நிலுவை தொகை உள்ளிட்டவைகளை செலுத்த வேண்டும்.
விடுமுறை கால ஊதியம் வழங்குவதோடு தொழிலாளர்களின் குடியிருப்புகளை பழுது பார்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களின் சார்பில் நீண்ட நாட்களாக தனியார் தேயிலை எஸ்டேட் நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். இவர்களின் கோரிக்கைகள் குறித்து நிர்வாகம் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் நேற்று முன்தினம் தொழிற்சாலை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நிர்வாக தரப்பில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தொழிலாளர்களின் பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுப்பது. பிற கோரிக்கைகள் தொடர்பாக ஓரிரு தினங்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதென முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story