புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி


புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 10 July 2019 4:30 AM IST (Updated: 10 July 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருந்து வரும் புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இருந்து திருக்கட்டளை செல்லும் சாலையில் 13 ஏக்கர் பரப்பளவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் தினந்தோறும் நகராட்சி துப்புரவு பணியாளர்களால் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கரும் புகை மூட்டம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான லாரிகள், 3 பொக்லைன் எந்திரம் உதவியுடன் நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில், தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து நகராட்சி பணியாளர்களுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோடை காலமாக இருப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு என்பது நகராட்சியில் நிலவி வருவதால் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளியாகும் புகையினால் காந்தி நகர், போஸ் நகர், லட்சுமி குமரப்பா நகர், திருக்கட்டளை உள்ளிட்ட பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் அவ்வப்போது குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிவதும், தீயணைப்பு துறையினர் அணைப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதற்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story