“ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை எதிர்ப்பது ஏழைகளுக்கு எதிரானது” எச்.ராஜா பேட்டி
“ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை எதிர்ப்பது ஏழைகளுக்கு எதிரானது“ என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படாமல், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுபிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது. பொதுபிரிவினர் என்பது பிராமணர் மட்டும் கிடையாது. பொது பிரிவில் 69 சமுதாயத்தினர் உள்ளனர். எனவே, போலி சமூகநீதி பேர்வழிகளை நம்ப வேண்டாம்.
கோவில்களின் அருகில் செயல்படும் ஓட்டல்களின் நன்மைகளுக்காக, கோவில்களில் அன்னதானம் வழங்க தனிநபர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. சதுரகிரி மலையில் 7 மடங்களில் வழங்கப்பட்ட அன்னதானம் நிறுத்தப்பட்டது. இதனால் அங்குள்ள ஓட்டல்களில் இட்லி ரூ.20-க்கும், தோசை ரூ.80-க்கும், ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.70 கோடி செலவில் வெளிப்பிரகார மண்டபம், ரூ.30 கோடி செலவில் யாத்ரா நிவாஸ் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக நிறைவேற்றி, கோவிலை சுற்றிலும் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
நாடு முழுவதும் எங்கு சென்றாலும் பணக்காரர்கள் வங்கி சேவையை பயன்படுத்துகிறார்கள். அதேபோன்று நாடு முழுவதும் எங்கு சென்றாலும் ஏழைகள் ரேஷன் பொருட்களை பெறுவதற்காகத்தான் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மிகவும் சிறந்த திட்டம். இதனை அனைவரும் ஏற்க வேண்டும். இந்த திட்டத்தை எதிர்ப்பது ஏழைகளுக்கு எதிரானது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரசாரம் செய்வேன். இந்த தேர்தலில் இருந்து தி.மு.க.வுக்கு சரிவு காலம் தொடங்குகிறது. ஏனெனில் அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை அளித்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றனர்.
இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
முன்னதாக, திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் எதிரில், மாற்று கட்சியினர் பா.ஜனதாவில் இணையும் விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர். கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பா.ஜனதா மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story