தேன்கனிக்கோட்டை அருகே கேட்பாரற்று கிடந்த 24 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்
தேன்கனிக்கோட்டை அருகே கேட்பாரற்று கிடந்த 24 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அதனை அந்தந்த எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டார். இதையொட்டி தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் போலீசார் சார்பில், தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அதனை போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து ஏராளமானோர் தங்களிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை ஆங்காங்கே வனப்பகுதியில் வீசி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி நக்சல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, உதவி இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி மற்றும் போலீசார் திப்பசந்திரம் கிராமம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் முனீஸ்வரன் கோவில் அருகில் கேட்பாரற்று 24 நாட்டுத்துப்பாக்கிகள் கிடந்தன. இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை மொத்தம் கேட்பாரற்று கிடந்த 80 நாட்டுத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story