தேனி அருகே குன்னூரில், தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு


தேனி அருகே குன்னூரில், தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 11 July 2019 4:30 AM IST (Updated: 10 July 2019 11:19 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே குன்னூரில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.

தேனி,

தேனி அருகே வைகை ஆற்றின் கரையோரம் குன்னூர் கிராமம் அமைந்துள்ளது. ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டால் இந்த கிராம பகுதிக்குள் தண்ணீர் புகுந்து விடும். இதனால், ஊருக்குள் ஆற்றின் கரையோரம் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. ஆற்றின் கரையோரம் அமைந்து உள்ள போதிலும் இந்த கிராமத்தில் தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் குன்னூர் அருகே வைகை ஆற்றில் கலந்து வைகை அணைக்கு செல்லும். ஆனால், முல்லைப்பெரியாற்றில் வரும் தண்ணீர், பல இடங்களில் மின்மோட்டார்கள் மூலம் திருடப்படுவதால் வைகை ஆற்றில் தண்ணீர் வருவது இல்லை. இதனால், வைகை ஆறு வறண்டு கிடக்கிறது.

குன்னூர் வைகை ஆற்றில் ஏராளமான கிராமங்களுக்கான குடிநீர் திட்டங்களுக்காக உறைகிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆற்றில் நீரோட்டம் இல்லாததால் உறைகிணறுகள் வறண்டு கிடக்கின்றன. கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் கிராமங்களுக்கும் முறையாக தண்ணீர் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது.

அதேநேரத்தில் குன்னூர் கிராமத்திலும் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர். கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், பொதுமக்கள் தங்கள் கிராமத்தின் வழியாக கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் எடுத்து செல்லும் குழாய்களில் அமைக்கப்பட்டுள்ளவால்வு பகுதியில் கசியும் தண்ணீரை வரிசையில் காத்திருந்து பிடித்து செல்லும் பரிதாப நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், வால்வு அமைந்துள்ள பகுதியில் ஏராளமான குடங்களுடன் இரவு, பகலாக மக்கள் காத்திருக்கின்றனர். எனவே, தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story