வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேனி,
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, கடந்த மாதம் 30-ந்தேதிப்படி குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தற்போது இத்திட்டத்தின்படி காலாண்டு ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.900, பிளஸ்-2 தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,200, பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,800 என 3 ஆண்டுகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஒரு வருடம் நிறைவு செய்திருந்தாலே போதுமானது. இவ்வாறான மனுதாரர்களின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு காலாண்டு ஒன்றுக்கு ரூ.1,800, பிளஸ்-2 கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.2,250, பட்டதாரிகள் எனில் ரூ.3 ஆயிரம் என 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற 31.3.2019 அன்றைய நிலவரப்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோரைப் பொறுத்தமட்டில் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில், குடும்ப ஆண்டு வருமானத்துக்கு உச்ச வரம்பு கிடையாது.
பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் இந்த உதவித் தொகை பெற தகுதியல்லாதவர்கள். இந்த உதவித்தொகை பெறுவதற்கு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் அனைத்து கல்விச் சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story