தண்ணீர் தேடி வந்தபோது பரிதாபம், வாகனம் மோதி கரடி பலி


தண்ணீர் தேடி வந்தபோது பரிதாபம், வாகனம் மோதி கரடி பலி
x
தினத்தந்தி 11 July 2019 4:30 AM IST (Updated: 10 July 2019 11:19 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே தண்ணீர் தேடி வந்தபோது வாகனம் மோதி கரடி இறந்தது.

ஆண்டிப்பட்டி,

தேனி-மதுரை மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் கரடி, மான், நரி, செந்நாய்கள், குரங்குகள் அதிகளவில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. இதன் காரணமாக அங்குள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது.

வனவிலங்குகளுக்கு இரை மற்றும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றை தேடி மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் புகுந்து விடுகின்றன.

அதன்படி ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் இருந்து தண்ணீரை தேடி வந்த கரடி ஒன்று, தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த வாகனம் கரடி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கரடி பரிதாபமாக இறந்தது.

இதுகுறித்து ஆண்டிப்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வனச்சரகர் சுதந்திரபாண்டியன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று, கரடியின் உடலை கைப்பற்றி ஆண்டிப்பட்டி வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு கால்நடை மருத்துவர் அப்துல்ரகுமான் தலைமையிலான குழுவினர், உடலை பரிசோதனை செய்து அங்கேயே புதைத்து விட்டனர். விபத்தில் பலியானது ஆண் கரடி ஆகும். அதற்கு ஒரு வயது இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே வனவிலங்குகளின் நலனை கருத்தில் கொண்டு ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் தண்ணீர் தொட்டிகளை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story