குன்னூர் தேயிலை ஏல மையத்தில், ரூ.20 கோடி கூடுதல் வருமானம் - சர்வதேச மேலாண்மை ஆலோசகர் தகவல்
குன்னூர் தேயிலை ஏல மையத்தில் ரூ.20 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக சர்வதேச மேலாண்மை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கம்பெனி மற்றும் சிறுதேயிலை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் தேயிலை தூள் குன்னூரில் உள்ள தேயிலை ஏல மையம் மூலம் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. ஏல மையத்தின் மொத்த வருமானம் கடந்த 6 மாதத்தில் கடந்த ஆண்டை விட ரூ.20 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச மேலாண்மை ஆலோசகர் பி.எஸ்.சுந்தர் கூறியதாவது:-
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 6 மாத அரையாண்டில் தேயிலை ஏல மையத்தில் ரூ.20 கோடி கடந்த ஆண்டை விட கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் குறைந்த அளவு தேயிலை தூள் விற்பனையாகி இருந்தாலும் விலையில் ஏற்றம் கண்டுள்ளது.
இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 26 ஏலங்கள் நடைபெற்றன.முதல் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை குளிர் காலமானதால்தேயிலை உற்பத்தி நடைபெறவில்லை. இதனால் வட மாநில வர்த்தகர் கள் குன்னூர் தேயிலை ஏல மையத்திற்கு தேயிலை கொள்முதல் செய்ய அதிக அளவு வருகை தந்தனர். இதனால் தேயிலை தூளுக்கு விலை உயர்ந்தது. ஆனால் ஏப்ரல் மாதம் முதல் வட மாநிலத்தில் தேயிலை உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் வட மாநில வர்த்தகர்கள் அங்குள்ள ஏல மையங்களில் தேயிலை தூள் வாங்க கவனம் செலுத்துகின்றனர்.
இதனால் குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விற்பனையின் அளவு குறைந்துள்ளது.
கடந்த 6 மாதத்தில் 2 கோடியே 77 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனையாகி உள்ளது.
இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 2 கோடியே 89 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனையாகி இருந்தது. 6 மாத சராசரி விலை ஒரு கிலோவிற்கு 98 ரூபாய் 12 பைசாவாக இருந்தது. கடந்த ஆண்டு இந்த விலை 86 ரூபாய் 99 பைசாவாக இருந்தது. இதனடிப்படையில் ஒரு கிலோவிற்கு 11 ரூபாய் 13 பைசா கூடுதல் விலை இந்த ஆண்டு கிடைத்துள்ளது.
இதனால் கடந்த 6 மாதங்களில் விற்பனையான மொத்த மதிப்பு ரூ.271 கோடியே 79 லட்சம் ஆகும். கடந்த ஆண்டு மொத்த வருமானம் ரூ.251 கோடியே 40 லட்சம் ஆகும். இதனை வைத்து பார்க்கும் போது இந்த ஆண்டு 6 மாதங்களில் கடந்த ஆண்டை விட ரூ.20 கோடியே 39 லட்சம் கூடுதல் வருமானம் கிடைத்து உள்ளது. இது 8.11 சதவிகித வளர்ச்சி ஆகும்.
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு இறுதியில் கடந்த ஆண்டை விட சுமார் ரூ.40 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story