மீனவரை அடித்துக்கொன்று விட்டு நாடகமாடிய மகன், தாயுடன் கைது


மீனவரை அடித்துக்கொன்று விட்டு நாடகமாடிய மகன், தாயுடன் கைது
x
தினத்தந்தி 10 July 2019 11:00 PM GMT (Updated: 10 July 2019 7:11 PM GMT)

தூத்துக்குடியில் கடலில் மீனவர் தவறி விழுந்து இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை அடித்துக்கொன்று விட்டு நாடகமாடிய மகன், தாயுடன் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி சின்னத்துரை (வயது 47). இவர் தனது மகன்கள் மகாராஜா (24), மார்ட்டின் (21) ஆகியோருடன் கடந்த 5-ந் தேதி பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது மார்ட்டின் படகில் படுத்து தூங்கி விட்டார். அவர் கண்விழித்து பார்த்தபோது, படகில் இருந்த தந்தை மற்றும் அண்ணனை காணவில்லை.

இதனால் அவர் அந்த பகுதியில் தேடிப்பார்த்தார். பின்னர் அவர் கரைக்கு வந்து மீனவர்களை அழைத்து சென்று தேடிப்பார்த்தார். அப்போது நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த மகாராஜாவை அந்த பகுதியில் வந்த மீனவர்கள் மீட்டனர். ஆனால், அந்தோணி சின்னத்துரையை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் காணாமல் போன அந்தோணி சின்னத்துரையின் உடல் ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் கடற்கரையில் ஒதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர் கடலில் தவறி விழுந்து இறந்ததாக கருதப்பட்டது. தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த அந்தோணி சின்னத்துரையின் தலையில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தோணி சின்னத்துரை சாவில் மர்மம் இருப்பதாக, அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்தோணி சின்னத்துரை அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் உஷார் ஆனார்கள். தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலையத்தில் இருந்து இந்த வழக்கு தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

அந்த போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, அந்தோணி சின்னத்துரையின் மனைவி ரெக்ஸ்லின் மேரி, மகன்கள் மகாராஜா, மார்ட்டின் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்தோணி சின்னத்துரை அடிக்கடி ரெக்ஸ்லின் மேரியிடம் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தார். இதனால் அவரது மூத்த மகன் மகராஜாவிடம் தந்தையின் செயல்கள் குறித்து கூறி உள்ளார். இதனால் அந்தோணி சின்னத்துரையை கொலை செய்ய மகாராஜா முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த 5-ந் தேதி அந்தோணி சின்னத்துரை, மகாராஜா, மார்ட்டின் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சிறிது தூரம் சென்றதும், மார்ட்டின் படகில் படுத்து தூங்கி விட்டார். அப்போது அந்தோணி சின்னத்துரை, தனது மனைவியை பற்றி அவதூறாக பேசியுள்ளார். இதனால் மகாராஜாவுக்கும், அந்தோணி சின்னத்துரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மகாராஜா படகை திருப்புவதற்கு பயன்படுத்தக்கூடிய கட்டையை எடுத்து அந்தோணி சின்னத்துரையின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் கடலில் விழுந்தார். பின்னர் மகாராஜாவும் கடலில் குதித்தார். அப்போது அங்கு வந்த மீனவர்கள் மகாராஜாவை மீட்டனர். கரைக்கு வந்த மகாராஜா, தந்தை கடலில் விழுந்து விட்டதாகவும், அவரை காப்பாற்ற கடலில் குதித்ததாகவும், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று நாடகமாடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்தோணி சின்னத்துரையின் மனைவி ரெக்ஸ்லின் மேரி, அவரது மகன் மகாராஜா ஆகிய 2 பேரையும் தாளமுத்துநகர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Next Story