தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க கோரி திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் உண்ணாவிரதம்


தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க கோரி திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 11 July 2019 4:30 AM IST (Updated: 11 July 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க கோரி திருச்சியில் அரசு டாக்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருச்சி,

தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு டாக்டர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கமாநிலசெயலாளர் டாக்டர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் அருளஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த உண்ணாவிரதத்தில் அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும். தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி மட்டுமல்லாமல் நோயாளிகளின் சேவைக்கு ஏற்ப மருத்துவர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்தது.

இது குறித்து மாநில பொருளாளர் அருளஸ்வரன் கூறுகையில், “எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தற்போது ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகிறோம். நாளை(வெள்ளிக்கிழமை) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டமும், அதனை தொடர்ந்து 15, 16-ந் தேதிகளில் சென்னையில் உண்ணாவிரதமும் நடத்த உள்ளோம். 17-ந் தேதி சட்டசபையில் மருத்துவத்துறையின் மானியக்கோரிக்கையின்போது எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அறிவிப்பு வெளியிட வேண்டும். அப்படி இல்லையென்றால் 18-ந் தேதி முதல் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணிப்பது உள்பட பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்“ என்றார்.

Next Story