செங்கல்பட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
செங்கல்பட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் கிராமத்தில் 390–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பாலாறு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக இந்த பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொன்விளைந்த களத்தூர் பகுதி செங்கல்பட்டு– ஆனூர் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.