உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் 2 வாலிபர்கள் சாவு, ஆட்டோ டிரைவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற்ற விபத்தில் 2 வாலிபர்கள் இறந்தனர். ஆட்டோ மோதியதில் வாலிபர்கள் இறந்ததாக கூறி, ஆட்டோ டிரைவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் அருண்(வயது 23). இவர் உளுந்தூர்பேட்டையில் விளம்பர பதாகை தயாரிக்கும் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கெடிலம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அருண் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த திருநாவலூர் கிராமத்தை சேர்ந்த சேட்டு மகன் சேகர்(20) ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிள்கள் மோதியதால் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறி திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து ஆட்டோ ‘நம்பர் பிளேட்’ ஒன்று கிடந்ததை கைப்பற்றினர். இதனால் ஆட்டோ விபத்தை ஏற்படுத்தி இருக்கலாமோ? என்ற சந்தேகத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அருண் மற்றும் சேகரின் இறப்புக்கு அந்த ஆட்டோ தான் காரணம் என்றும், அந்த ஆட்டோ டிரைவரை கைது செய்யக்கோரியும் அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கெடிலம்-பண்ருட்டி சாலையில் திருநாவலூர் போலீஸ் நிலையம் அருகே நேற்று மாலை 5 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் உடனடியாக அந்த ஆட்டோ டிரைவரை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த விழுப்புரம் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மற்றும் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story