தேவதானப்பட்டி அருகே, தலையில் கல்லைப்போட்டு அ.ம.மு.க. பிரமுகர் படுகொலை - 4 பேரிடம் விசாரணை
தேவதானப்பட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு அ.ம.மு.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேவதானப்பட்டி,
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரத்தில் இருந்து அணைக்கரைப்பட்டிக்கு செல்லும் சாலையில் குட்டிக்கரடு உள்ளது. இதன் அடிவாரத்தில், தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பிணமாக கிடந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம், ஜெயமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று முதலில் தெரியவில்லை.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே குள்ளப்புரத்தை சேர்ந்த மாரிமுத்து என்ற காமராஜ் (வயது 60) என்பவரை காணவில்லை என்று அவருடைய உறவினர்கள் தேடினர். இதனையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அவர்கள் பார்த்தபோது, கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது மாரிமுத்து என்று தெரியவந்தது.
அ.ம.மு.க. பிரமுகரான மாரிமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே அவரிடம் மதுபானம் வாங்கி தருவதாக கூறி கரட்டு பகுதிக்கு அழைத்து சென்று, தலையில் கல்லைப்போட்டு கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
ஏனெனில், அவர் பிணமாக கிடந்த இடத்தில் 2 மதுபாட்டில்கள் கிடந்தன. அதில் ஒரு பாட்டிலில் பாதி அளவு மதுபானம் இருந்தது. மற்றொரு பாட்டிலில் இருந்த மதுபானம் முழுவதும் குடிக்கப்பட்டிருந்தது. அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பதில் மர்மம் நீடித்து வருகிறது.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த தடயவியல் நிபுணர்கள், அங்கு கிடந்த தடயங்களை சேகரித்தனர். இதேபோல் மோப்பநாய் பென்னி வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சென்ற நாய், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
தலையில் கல்லைப்போட்டு அ.ம.மு.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேவதானப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story