போலீஸ்போல் நடித்து ரூ.3 கோடி கொள்ளை அடித்த வழக்கில், கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது


போலீஸ்போல் நடித்து ரூ.3 கோடி கொள்ளை அடித்த வழக்கில், கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 July 2019 4:15 AM IST (Updated: 11 July 2019 5:28 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் போல் நடித்து ரூ.3 கோடி கொள்ளை அடித்த வழக்கில் கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து ரூ.31 லட்சம், 3 சொகுசு கார்கள், ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெருந்துறை,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பூத்தனாங்கடியை சேர்ந்தவர் அன்வர்சதர்த். நகைக்கடை அதிபர். இவர் கோவையில் சிட்டி கோல்டு என்ற பெயரில் நகை வைத்து நடத்தி வருகிறார். சென்னை மற்றும் கோவையிலும் இவருக்கு நகைக்கடைகள் உள்ளன.

இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி (நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்த நாட்கள்) ரூ.3 கோடியை நம்பிக்கைக்கு உரிய பணியாளர்கள் 3 பேரிடம் கொடுத்து அதை கேரளாவில் உள்ள நகைக்கடையில் சேர்க்க சொல்லி தன்னுடைய காரிலேயே அவர்களை சென்னையில் இருந்து அனுப்பி வைத்தார்.

மறுநாள் 4-ந் தேதி அந்த கார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்க சாவடி அருகே வந்தது. அப்போது 2 கார்கள் அந்த வழியாக வந்தது. அதில் போலீஸ் உடையில் இருந்த சிலர், பணம் கொண்டு வந்த காரை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அன்வர்சதர்த் ஆட்கள் 3 பேரும் போலீசார் காரை சோதனையிடுகிறார்கள் என்று நம்பினார்கள்.

உடனே போலீஸ் உடையில் இருந்தவர்கள், அன்வர்சதர்த் அனுப்பி வைத்த 3 பேரையும் காருடன் கடத்தி சென்று தாக்கி அவர்களை வெவ்வேறு இடங்களில் இறக்கி விட்டார்கள். பின்னர் ரூ.3 கோடியுடன் அன்வர்சதர்த்தின் காரையும் கடத்தி சென்று விட்டார்கள்.

தாக்கப்பட்ட 3 பேரும் நடந்த விஷயங்களை அன்வர்சதர்த்திடம் தெரிவித்தார்கள். அவர் உடனே இதுபற்றி பெருந்துறை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் போலீஸ் உடையில் வந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தார்கள்.

இந்தநிலையில் தனிப்படை போலீசார் நேற்று விஜயமங்கலம் சுங்க சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது ஒரு காரில் 3 பேர் சந்தேகப்படும் படி இருந்தார்கள். உடனே 3 பேரையும் காரில் இருந்து இறங்க சொல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் செம்புமுக்கு பகுதியை சேர்ந்த ஜோதிதாமஸ் (வயது 39), கோழிக்கோடு செலவூர் பகுதியை சேர்ந்த முரளிதரன் (35), அலியார் (48) ஆகியோர் என்பதும். ஜோதிதாமஸ்தான் தன்னுடைய கூட்டாளிகள் அலியார், முரளிதரன் மற்றும் 8 பேருடன் சேர்ந்து கடந்த ஏப்ரல் 4-ந் தேதி போலீஸ் உடையில் அன்வர்சதர்த் ஆட்களிடம் ரூ.3 கோடியை காருடன் கொள்ளையடித்ததும், அந்த பணத்தை 11 பேரும் பங்குபோட்டுக்கொண்டதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.31 லட்சம் ரொக்கப்பணம், 3 சொகுசு கார்கள், ஒரு மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்கள்.

மேலும் தலைமறைவாக உள்ள ஜோதிதாமசின் கூட்டாளிகள் 8 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

போலீசார் போல் உடை அணிந்து வந்த கொள்ளையர்களுக்கு அன்வர்சதர்த் ரூ.3 கோடியை பணியாளர்களிடம் கொடுத்து அனுப்பியது எப்படி தெரிந்தது?, யாராவது ரகசிய தகவல் கொடுத்து, அதன்பேரில் கொள்ளையர்கள் கண்காணித்து பின்தொடர்ந்து வந்தார்களா? அல்லது அவர்கள் தேர்தல் நேரம் என்பதால் காரில் யார் வந்தாலும் அவர்களிடம் பறக்கும் படை என்று கூறி கொள்ளை அடிக்க காத்திருந்தார்களா? இந்த கும்பல் இதற்கு முன்னால் வேறு ஏதேனும் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளதா? என்று கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரூ.3 கோடி கொள்ளை அடித்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பெருந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story