பராமரிப்பு பணிக்காக தஞ்சை அரண்மனை நுழைவுவாயில் திடீர் மூடல் தரைதளம் சீரமைக்கும் பணி தீவிரம்


பராமரிப்பு பணிக்காக தஞ்சை அரண்மனை நுழைவுவாயில் திடீர் மூடல் தரைதளம் சீரமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 11 July 2019 10:45 PM GMT (Updated: 11 July 2019 7:02 PM GMT)

பராமரிப்பு பணிக்காக தஞ்சை அரண்மனை நுழைவு வாயில் திடீரென மூடப்பட்டது. தரைதளம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை நகரம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில், சிவகங்கை பூங்கா, அரண்மனை, சரசுவதிமகால் நூலகம் போன்றவை உள்ளது. தஞ்சை பெரியகோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அரண்மனை, சரசுவதி மகால் நூலகத்துக்கு செல்ல தவறுவதில்லை.

இந்த அரண்மனை வளாகத்தில் அருங்காட்சியகமும் உள்ளது. இதனை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட அனுமதி உண்டு. இதற்காக நுழைவு வாயில் அருகே உள்ள டிக்கெட் வழங்கும் மையத்தில் டிக்கெட் வாங்கிக்கொண்டு பார்வையிடலாம். அரண்மனை, சரசுவதி மகால் நூலகம், அருங்காட்சியம் ஆகியவற்றை வரிசையாக சென்று பார்வையிடலாம்.

இந்த அரண்மனைக்கு நுழையும் இடம் அரசர் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் மற்றும் தீயணைப்புத்துறை அலுவலகத்துக்கு இடையில் உள்ளது. இந்த கட்டிடம் மிகவும் பழமைவாய்ந்த கட்டிடம் ஆகும். இந்த கட்டிடங்களுக்கு இடையில் நுழைவு வாயில் உள்ளது. இந்த நுழைவுவாயிலின் தரைதளம் சிமெண்டு தரையினால் ஆனது. இது சிதிலமடைந்து காணப்பட்டது.

இந்த வழியாகத்தான் சுற்றுலா பயணிகள் வாகனங்களிலும், நடந்தும் சென்று வந்தனர். தற்போது இந்த தரைதளம் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக ஏற்கனவே இருந்த தரைதளம் அகற்றப்பட்டு புதிதாக நவீன முறையில் தரைதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நுழைவுவாயில் திடீரென மூடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதற்காக நுழைவுவாயிலின் இருபுறமும் தடுப்புக்கம்பிகள் அமைக்கப்பட்டு மூடப்பட்டது. இதையடுத்து நுழைவுவாயிலில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. அரண்மனை, சரசுவதிமகால், அருங்காட்சியகத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் அரண்மனை வளாகத்தில் உள்ள மைதானம் வழியாக வந்து, விவசாயி சிலை வழியாக பின்புறவாசல் வழியாக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதற்காக அரண்மனை வளாகத்தில் மூடி வைக்கப்பட்டு இருந்த கேட்டும் திறக்கப்பட்டது. இதே போல் அருங்காட்சியகம் அருகே இருந்த பின்புற வாசலும் திறக்கப்பட்டு வாகனங்களும் அந்த வழியாக சென்று வந்தன. ஆனால் பராமரிப்பு பணி நடைபெறுகிறது, மாற்று வழியில் செல்லுங்கள் என்று நுழைவுவாயில் அருகே எந்தவித அறிவிப்பு பலகையும் இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். இன்னும் ஒரிருநாளில் பணி முடிந்து மீண்டும் நுழைவுவாயில் திறக்கப்படும் என கூறப்படுகிறது.

Next Story