தஞ்சை பெரியகோவிலில் ரூ.8½ லட்சம் உண்டியல் காணிக்கை 109 கிராம் தங்கம், 147 கிராம் வெள்ளியும் கிடைத்தது


தஞ்சை பெரியகோவிலில் ரூ.8½ லட்சம் உண்டியல் காணிக்கை 109 கிராம் தங்கம், 147 கிராம் வெள்ளியும் கிடைத்தது
x
தினத்தந்தி 12 July 2019 4:00 AM IST (Updated: 12 July 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பெரியகோவிலில் ரூ.8½ லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. மேலும் 109 கிராம் தங்கம், 147 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது. இங்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இங்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன், தெட்சிணாமூர்த்தி, நடராஜர், கருவூரார் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளில் மொத்தம் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணப்படும். அதன்படி இந்த மாதம் நேற்று திறந்து எண்ணப்பட்டன.

முன்னதாக உண்டியல்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அம்மன் சன்னதிக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் அங்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் சிவராம்குமார், வில்வமூர்த்தி ஆகியோர் தலைமையில் கோவில் செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன.

சுயஉதவிக்குழுவினர், ஓம்சக்தி வாரவழிபாட்டுக்குழுவினர், வங்கி ஊழியர்கள் ஆகியோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.8 லட்சத்து 41 ஆயிரத்து 150 கிடைத்தது. மேலும் 109 கிராம் தங்கமும், 147 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

Next Story