6 மாதம் ஆகியும் செயல்படாத கடைகள், புதிய இருசக்கர வாகன நிறுத்துமிடம் தஞ்சை புதிய பஸ் நிலையத்தின் அவலம்


6 மாதம் ஆகியும் செயல்படாத கடைகள், புதிய இருசக்கர வாகன நிறுத்துமிடம் தஞ்சை புதிய பஸ் நிலையத்தின் அவலம்
x
தினத்தந்தி 11 July 2019 10:30 PM GMT (Updated: 11 July 2019 9:15 PM GMT)

தஞ்சை புதிய பஸ் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி இருசக்கர வாகன நிறுத்துமிடம், கடைகளை அதன் உரியவர்களிடம் சாவி ஒப்படைக்கப்பட்டு 6 மாதம் ஆகியும் இன்னும் செயல்படவில்லை.

தஞ்சாவூர்,

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர், திருச்செந்தூர், நாகர்கோவில், மதுரை, திருச்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, பழனி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரத்திலும் மக்கள் நடமாட்டம் இருக்கும். இந்த பஸ் நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் எல்லாம் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ளன. இவைகள் மழையிலும், வெயிலிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்கவும், வெளியூர் செல்லும் பயணிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்து புதிய பஸ் நிலையத்தில் நிறுத்துவதற்கு வசதியாகவும் ரூ.1½ கோடி மதிப்பில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது.

50 கடைகள்

மேலும் பஸ் நிலையத்தில் மக்களுக்கு இடையூறின்றி கடைகள் அனைத்தையும் ஒரு வளாகத்தில் கொண்டு செல்ல மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக புதிய பஸ் நிலையத்தின் முன்பகுதி வலப்புறத்தில் 25 கடைகளும், இடதுபுறத்தில் 25 கடைகளும் என மொத்தம் 50 கடைகள் கொண்ட வணிக வளாகம் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கு மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

இவை கட்டி முடிக்கப்பட்டு 1 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை. முதலில் மின்சார இணைப்பு வழங்காததால் கடைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு மின் இணைப்பும் வழங்கப்பட்டு கடைகள் மற்றும் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தின் சாவியும் அதன் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக மாநகராட்சி அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர். சாவி ஒப்படைத்த பின்னரும் புதிய இடத்தில் கடைகள், வாகன நிறுத்துமிடம் செயல்படாமல் உள்ளது.

பயன்பாட்டுக்கு வருமா?

இதில் முன்பு நகர பஸ்கள் பஸ் நிலையத்தில் மையப்பகுதியில் உள்ள 2 வாசல்களில் ஒன்று வழியாக உள்ளே வந்து மற்றொன்று வழியாக வெளியே செல்லும். மீதமுள்ள 2 வாசல்கள் வழியாக புறநகர் பஸ்கள் வந்து செல்லும். இதில் நகர பஸ்கள் வந்து செல்லும் ஒரு வழி அடைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நகர பஸ்கள் வந்து செல்வதிலும் சிரமம் உள்ளது.

எனவே புதிதாக கட்டி சாவி ஒப்படைக்கப்பட்டும் செயல்படாமல் உள்ள கடைகள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை உடனே பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story