திராட்சை தோட்ட தொழிலாளர்கள், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி


திராட்சை தோட்ட தொழிலாளர்கள், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி
x
தினத்தந்தி 11 July 2019 10:30 PM GMT (Updated: 11 July 2019 11:07 PM GMT)

உத்தமபாளையம் தாசில்தார் தலைமையில் திராட்சை விவசாயிகள், தோட்ட தொழிலாளர்களுக்கு இடையே நடந்த சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

உத்தமபாளையம்,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக காமயகவுண்டன்பட்டி, நாராயணதேவன்பட்டி, சுருளிப்பட்டி, ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, சின்னஓவுலாபுரம், கூடலூர், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி உள்ளிட்ட ஊர்களில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் திராட்சை விளையும் இடமாக கம்பம் பள்ளத்தாக்கு விளங்குகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக காமயகவுண்டன்பட்டி திராட்சை விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் இடையே சம்பள உயர்வு குறித்து கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இதுகுறித்து தோட்ட தொழிலாளர்களும், விவசாயிகளும் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவிடம் மனு அளித்தனர். எனவே அவர் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தமபாளையம் தாசில்தார் உதயராணிக்கு உத்தரவிட்டார். அதையொட்டி நேற்று தாசில்தார் தலைமையில் விவசாயிகள், தோட்ட தொழிலாளர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், தொழிலாளர்கள் காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை செய்ய சம்பளமாக ரூ.500 வழங்கவேண்டும், விவசாயிகளிடம் ரூ.500-க்கு மேல் சம்பளம் வழங்கவேண்டும் என்று தொழிலாளர்கள் கட்டாயப்படுத்த கூடாது, வேலைகள் அதிகமாக இருக்கும் போது தொழிலாளர்கள் விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும், விவசாயிகளிடம் ஒப்பந்த முறையில் வேலைகள் கேட்க கூடாது, வேலைகள் அதிகமாக இருக் கும் போது காமயகவுண்டன்பட்டிக்கு அருகில் உள்ள ஊர்களில் இருந்து தொழிலாளர் களை வேலைக்கு அழைப்பது என்றும், இதை உள்ளூர் தொழிலாளர்கள் ஏற்று கொள்ளவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு தோட்ட தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று கூட்டத்தை விட்டு எழுந்து சென்றனர். இதனால் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

Next Story