சதுரகிரி கோவிலில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்து, மதுரை, விருதுநகர் கலெக்டர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை விழாவையொட்டி பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்வது குறித்து மதுரை, விருதுநகர் கலெக்டர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பெருநாழியைச் சேர்ந்த முத்திருளப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘சதுரகிரி சுந்தர மகாலிங்கசுவாமி கோவில் பகுதியில் இருந்த அன்னதான மடங்கள் மூலம் பக்தர்களுக்கு 24 மணிநேரமும் இலவச அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த மடங்களை மூட வேண்டும் என்று அறநிலையத்துறை இணை கமிஷனர் உத்தரவிட்டார். பிறகு தனியார் உணவகங்கள் திறக்கப்பட்டன. அங்கு அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்கிறார்கள். இதனால் அந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அங்கு மீண்டும் அன்னதான மடங்களை திறக்கவும், மூடப்பட்டு பராமரிப்பின்றி கிடக்கும் கழிப்பறைகளை சுத்தம் செய்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை செய்து தரவும் உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.
அவரை போல மேலும் சிலர் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், “வருகிற 31-ந்தேதி ஆடி அமாவாசை தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருவார்கள். அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காவிட்டால் மிகுந்த சிரமப்படுவார்கள். அவர்களுக்கு உரிய வசதிகளை செய்ய உத்தரவிட வேண்டும்“ என்று வாதாடினார்கள்.
விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பாக மதுரை மற்றும் விருதுநகர் கலெக்டர்கள், விருதுநகர் மாவட்ட வன அலுவலர், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்களை கொண்ட ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். அவர்கள் கோவிலில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்து முடிவு எடுத்து அரசு தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
உணவுப்பொருட்களை மலைப்பகுதியில் சமைப்பதை தவிர்க்கும் வகையில் மலை அடிவாரத்திலேயே தயாரித்து மேலே கொண்டு செல்வது பற்றியும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story