தேனி பகுதியில், ஒரே நாளில் 3 இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தம் - கோவில் செயல் அலுவலரிடம் விளக்கம் கேட்பு


தேனி பகுதியில், ஒரே நாளில் 3 இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தம் - கோவில் செயல் அலுவலரிடம் விளக்கம் கேட்பு
x
தினத்தந்தி 12 July 2019 4:15 AM IST (Updated: 12 July 2019 4:37 AM IST)
t-max-icont-min-icon

தேனி பகுதியில் நேற்று ஒரே நாளில் 3 இளம்வயது பெண்களுக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. விதிகளை பின்பற்றாததால் வீரபாண்டி கோவில் செயல் அலுவலரிடம், விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தேனி,

தேனி மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடையாத இளம்வயது பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதை தடுக்க சைல்டு லைன் அலுவலர்கள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் கிடைக்கும் இடங்களுக்கு விரைந்து சென்று இளம்வயது திருமணங்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் திருமண வயதை எட்டாத பெண்ணுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சைல்டு லைன் அலுவலர்கள் அங்கு விரைந்து சென்றனர். அங்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்ட பெண்ணுக்கு 17 வயதே ஆவது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அந்த திருமணத்தை போலீசார் துணையுடன் தடுத்து நிறுத்தினர்.

அதேபோல், தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் 17 வயது பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணத்தை சைல்டு லைன் அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும், ஆண்டிப்பட்டி அம்மாபட்டி பகுதியில் இளம்வயது திருமணம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சைல்டு லைன் அலுவலர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு 14 வயது சிறுமிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது. அந்த திருமணத்தையும் தாலி கட்டுவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக தடுத்து நிறுத்தினர்.

திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து இளம்வயது பெண்கள் 3 பேரையும் அவர்களின் பெற்றோரையும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரே‌‌ஷ்குமார் முன்னிலையில் சைல்டு லைன் அலுவலர்கள் ஆஜர்படுத்தினர். அங்கு பெற்றோருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையும் முன்பு திருமணம் செய்து வைக்கக்கூடாது என்றும், அவர்களின் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் கூறி அவர்களிடம் இருந்து எழுதி வாங்கப்பட்டது.

இதற்கிடையே வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் திருமண ஏற்பாடு செய்யும் போது, மணமக்களின் வயது சான்றை சரிபார்க்காமல் திருமணம் நடத்தி வைக்கப்படுவதாகவும், அங்கு அதிக அளவில் இளம்வயது திருமணம் நடப்பது நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம், சைல்டு லைன் அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் செயல் அலுவலருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரே‌‌ஷ்குமார் கூறுகையில், ‘இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட 3 இடங்களிலும், தொடர்புடைய பெற்றோரிடம் தங்களின் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து விட்டு, அதற்கான சான்றை குழந்தைகள் நலக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமலும், வயது சான்றை சரிபார்க்காமலும் இளம்வயது பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. அதன்பேரில், கடந்த 6 மாத காலத்தில் எத்தனை திருமணம் அங்கு நடத்தி வைக்கப்பட்டது, அதில் எத்தனை மணமக்களின் வயது சான்று சரிபார்க்கப்பட்டுள்ளது என்பது குறித்து கோவில் செயல் அலுவலரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது’ என்றார்.

Next Story