தேனியில் தடைசெய்யப்பட்ட 220 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் - 8 கடைக்காரர்களுக்கு அபராதம்


தேனியில் தடைசெய்யப்பட்ட 220 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் - 8 கடைக்காரர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 12 July 2019 10:15 PM GMT (Updated: 12 July 2019 6:39 PM GMT)

தேனியில் தடை செய்யப்பட்ட 220 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 8 கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தேனி,

தேனி நகரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பை கள் பயன்பாடும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையும் அதிக அளவில் இருந்தன. இதையடுத்து தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், கடைகளில் சோதனைகள் செய்யவும் கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.

அதன்பேரில், உணவு பாதுகாப்புத்துறை, நகராட்சி சுகாதார அலுவலர்கள், போலீசார் இணைந்த குழுவினர் தேனி பழைய பஸ் நிலையம், பூ மார்க்கெட், கடற்கரை நாடார் தெரு ஆகிய இடங்களில் உள்ள கடைகளில், குடோன்களில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் நவநீதன், தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜன், நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் மற்றும் பலர் ஈடுபட்டனர்.

பூ மார்க்கெட், பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் சுமார் 20 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 8 கடைக்காரர்களுக்கு நகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர். மொத்தம் ரூ.3 ஆயிரத்து 200 அபராத தொகை வசூலிக்கப்பட்டது.

கடற்கரை நாடார் தெருவில் உள்ள ஒரு கடையில் சுமார் 200 கிலோ அளவில் பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடை உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், பழைய பஸ் நிலையம் பகுதியில் 5 கிலோ அளவுக்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், காலாவதியான குளிர்பானங்கள், இனிப்பு வகைகளும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

Next Story