சேலத்தில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: கிணற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிணற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மற்றொரு இடத்திலும் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினார்கள்.
சேலம்,
சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை அமைய உள்ளது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளித்தபோது, சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டமானது மத்திய அரசின் திட்டம் ஆகும். இது மாநில அரசின் திட்டம் அல்ல. மேலும் கடந்த காலத்தில் இழப்பீடு தொகை குறைவாக இருந்தது. தற்போது புதிய இழப்பீடு சட்டத்தின் வாயிலாக கூடுதலாக இழப்பீடு கொடுக்கிறோம், என்றார்.
இந்த நிலையில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல்-அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று காலை 11 மணியளவில் சேலத்தை அடுத்துள்ள பாரப்பட்டி கிராமம் கூமாங்காடு பகுதியில் உழவர் உற்பத்தியாளர் பேரியக்கம் சார்பில் விவசாயிகள் திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கருப்புக்கொடிகளையும், கோரிக்கை அட்டைகளையும் கையில் வைத்திருந்தனர். இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் 8 வழிச்சாலை திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக்கூறியதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த திட்டத்திற்காக மத்திய, மாநில அரசுகள் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். தொடர்ந்து 8 வழிச்சாலை திட்டத்திற்காக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும். எந்த காரணத்திற்காகவும் விவசாய நிலங்களை நாங்கள் விட்டுத்தர மாட்டோம். பத்து மடங்கு அதிகமாக இழப்பீடு தொகை வழங்கினாலும் எங்களது விளைநிலங்களை விட்டுத்தர மாட்டோம். மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் தி.மு.க. எம்.பி.க்கள் 8 வழிச்சாலை வேண்டாமென மனு அளித்துள்ளனர். அதனை மறைப்பதற்காகவே முதல்-அமைச்சர் தவறான தகவலை அளித்து வருகிறார். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு விவசாயிகள் கூறினர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். பெண்கள் மற்றும் விவசாயிகள் திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ளது பூலாவரி புஞ்சைக்காடு. இந்த பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் விவசாயிகள் திரண்டனர். பின்னர் அங்குள்ள ஒரு தனியார் தோட்டத்தில் விவசாய கிணற்றில் கருப்புக்கொடியுடன் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அப்போது, 8 வழிச்சாலைக்கு விவசாய நிலத்தை தர மாட்டோம், அரசு 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடும் வரை போராடுவோம், என கோஷம் எழுப்பினார்கள். இந்த போராட்டத்திற்கு 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க சேலம் ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் பெண்கள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் கூறும்போது, ஒரு சென்ட் நிலத்துக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் எங்கள் விவசாய நிலத்தை கொடுக்க மாட்டோம். எங்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும், என்றனர்.
Related Tags :
Next Story