படப்பை அருகே 2 கொலை வழக்குகளில் 4 பேர் கைது


படப்பை அருகே 2 கொலை வழக்குகளில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 13 July 2019 4:15 AM IST (Updated: 13 July 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே 2 கொலை வழக்குகளில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த கரசங்கால் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 19). அதே பகுதியில் உள்ள விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). இவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பெயிண்டராக வேலை செய்து வந்தனர்.

கடந்த வாரம் இவர்களுடன் வேலை செய்து வரும் பாலாஜி என்பவருடைய பிறந்த நாள் விழாவில் கலந்து கேக் வெட்டி கொண்டாடிவிட்டு வீட்டுக்கு வரும்போது, அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (41), கரசங்கால் அண்ணா தெருவை சேர்ந்த நைனி என்ற கோதண்டன் (48) ஆகியோர் புஷ்பராஜ், ரவிச்சந்திரன் ஆகியோரை வழிமறித்து செங்கல்லால் தலையிலும் முகத்திலும் தாக்கி உள்ளனர்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மணிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த புஷ்பராஜை மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புஷ்பராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் இறந்த புஷ்பராஜின் உடலை பிரேத பரிசோதனை முடிந்து கரசங்காலில் உள்ள வீட்டுக்கு எடுத்து வந்து இறுதி சடங்கிற்கான ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் போது அங்கு நின்று கொண்டிருந்த கரசங்கால் மலாலிபேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவா என்கிற சிவப்பிரகாசம் (35) என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திக்கொலை செய்தனர்.

அங்கு நின்று கொண்டிருந்த 3 பேருக்கு வெட்டு விழுந்தது. இந்த கொலை குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் புஷ்பராஜ் கொலை வழக்கில் செந்தில்குமார், நைனி ஆகியோரை போலீசார் கைது செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதேபோல் ஆட்டோ டிரைவர் சிவப்பிரகாசம் கொலை வழக்கில் கரசங்கால் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கோபி என்கிற கோபிநாத், (30) படப்பை டேவிட் நகர் பகுதியை சேர்ந்த அமனுல்லா ( 23) ஆகியோரையும் போலீசார் கைது செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார். நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Next Story