திருமயம் அருகே மொபட், மரம் மீது கார் மோதல்; 2 பேர் பலி


திருமயம் அருகே மொபட், மரம் மீது கார் மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 13 July 2019 4:00 AM IST (Updated: 13 July 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

திருமயம் அருகே மொபட் மற்றும் மரத்தின் மீது கார் மோதியது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திருமயம், 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மல்லாங்குடியை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (வயது 55). இவர் நேற்று மதியம் சொந்த வேலை காரணமாக நமண சமுத்திரம் -பொன்னமராவதி சாலையில் குழிபிறையை நோக்கி ஒரு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இதேபோல் புதுக்கோட்டையை சேர்ந்த அடைக்கலவன் (75) பொன்னமராவதியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டினார்.

திருமயம் அருகே உள்ள பொன்னனூர் பகுதியில் வந்தபோது எதிரே வந்த மொபட் மீது கார் மோதியது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அடைக்கலவன், முத்துக்கருப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பனையப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விபத்தில் இறந்த அடைக்கலவன், முத்துக்கருப்பன் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story