போராட்டத்துக்கு கணவர் உறுதுணையாக உள்ளார்: மதுவுக்கு எதிராக வேலூர் தொகுதியில் வீடு வீடாக பிரசாரம் - மதுரை வக்கீல் நந்தினி பேட்டி


போராட்டத்துக்கு கணவர் உறுதுணையாக உள்ளார்: மதுவுக்கு எதிராக வேலூர் தொகுதியில் வீடு வீடாக பிரசாரம் - மதுரை வக்கீல் நந்தினி பேட்டி
x
தினத்தந்தி 13 July 2019 5:00 AM IST (Updated: 13 July 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

‘‘நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் வேலூர் தொகுதியில் மதுவுக்கு எதிராக வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்ய உள்ளேன். எனது போராட்டத்துக்கு கணவர் உறுதுணையாக உள்ளார்’’ என்று மதுரை வக்கீல் நந்தினி கூறினார்.

புதூர்,

மதுரையை சேர்ந்த வக்கீல் நந்தினியும், அவருடைய தந்தை ஆனந்தனும் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கோர்ட்டில் சில தினங்களுக்கு முன்பு ஆஜராகினர். அப்போது, நீதிமன்றத்தை விமர்சித்ததாக இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் நந்தினிக்கு ஏற்பாடு செய்திருந்த திருமணம் தடைபட்டது. பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நந்தினிக்கும், என்ஜினீயர் குணாஜோதிபாசுவுக்கும் கோவிலில் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்பு நேற்று மதுரை புதூரில், வக்கீல் நந்தினி தனது கணவருடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மதுவை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, எனது தந்தைக்கு உறுதுணையாக நானும் சேர்ந்து போராடி வருகிறேன். எனது திருமணத்துக்கு இடையூறு ஏற்பட்டது. பின்னர் இடையூறு எல்லாம் தகர்ந்து, கோவிலில் எனது திருமணம் நடந்தது.

நான் மதுரை புதூரில் உள்ள லூர்து அன்னை பள்ளியில் 12–ம் வகுப்பு படித்து முடித்த பின்பு சட்டக்கல்லூரியில் பயின்று சட்டப்படிப்பை முடித்தேன். இப்போது தொடர்ந்து மதுவுக்கு எதிராக போராடி வருகிறேன். எனது தந்தை ஆனந்தன், தாய் லட்சுமி எனக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். 100–க்கும் மேற்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டதால் பல முறை சிறைக்கு சென்று உள்ளேன்.

நாங்கள் தொடர்ந்து போராடி வந்தாலும் டாஸ்மாக் கடைகளை ஒழிப்பதற்கு இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனது திருமணத்திற்கு பின்பும் எனது போராட்டம் தொடரும்.

எனது கணவர், சென்னையில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு போராட்டத்தில் எனக்கு உறுதுணையாக இருக்க மதுரைக்கு வந்து செயல்பட்டு வருகிறார்.

நான் மதுரையில் இருந்து கொண்டு போராட்டத்தை தொடர்வேன். மேலும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள வேலூர் தொகுதி முழுக்க வீடு வீடாகச் சென்று மதுவுக்கு எதிராக பிரசாரம் செய்வதுடன், போராட்டமும் நடத்த முயற்சி எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story