ஆரல்வாய்மொழி அருகே ஆம்னி பஸ்–மோட்டார் சைக்கிள் மோதல்; கணியான் கூத்து கலைஞர் பலி நண்பர் படுகாயம்


ஆரல்வாய்மொழி அருகே ஆம்னி பஸ்–மோட்டார் சைக்கிள் மோதல்; கணியான் கூத்து கலைஞர் பலி நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 13 July 2019 10:15 PM GMT (Updated: 13 July 2019 3:13 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே ஆம்னி பஸ்–மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கணியான் கூத்து கலைஞர் பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.

ஆரல்வாய்மொழி,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கணியான் காலனியை சேர்ந்தவர் சங்கர் (வயது 32), கணியான் கூத்து கலைஞர். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள ஒரு கோவில் விழாவுக்கு வந்து கலந்து கொண்டார். அவருடன் நண்பர் நெல்லையை சேர்ந்த முத்துப்பாண்டியும் வந்து இருந்தார். விழா முடிந்த பின்பு சங்கர், முத்துப்பாண்டி  இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று ஊருக்கு புறப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளை முத்துப்பாண்டி ஓட்டினார். சங்கர் பின்னால் உட்கார்ந்திருந்தார். இருவரும் வெள்ளமடத்தை அடுத்த மயிலாடி விலக்கு பகுதியில் செல்லும் போது எதிரே சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த ஆம்னி பஸ் மோதியது.

அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்த சங்கர், முத்துப்பாண்டி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சங்கர் பரிதாபமாக பலியானார்.

 முத்துப்பாண்டி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் வெகு நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் அவரை நெடுஞ்சாலை ரோந்து படையினர் மீட்டு வாகனத்தில் ஏற்றி சென்று அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story