முசிறி போலீஸ் நிலையம் எதிரே நகைக்கடையில் வெள்ளிக்கொலுசுகளை திருடிய 2 பெண்கள் கைது


முசிறி போலீஸ் நிலையம் எதிரே நகைக்கடையில் வெள்ளிக்கொலுசுகளை திருடிய 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 14 July 2019 4:45 AM IST (Updated: 13 July 2019 10:57 PM IST)
t-max-icont-min-icon

முசிறி போலீஸ் நிலையம் எதிரே நகைக்கடையில் 15 ஜோடிவெள்ளிக் கொலுசுகளை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

முசிறி,

திருச்சி மாவட்டம் முசிறியில் போலீஸ் நிலையம் எதிரே நகைக்கடை வைத்து நடத்தி வருபவர் சந்தோஷ்குமார். இவருடைய கடையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கொலுசு வாங்க 2 பெண்கள் வந்தனர். பல்வேறு விதமான கொலுசுகளை அவர்கள் வாங்கி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கடை உரிமையாளரின் கவனம் திசை திரும்பிய நேரத்தில், 15 ஜோடி வெள்ளிக்கொலுசுகளை 2 பெண்களும் திருடி பைகளில் மறைத்து வைத்துள்ளனர். பின்னர் ஒரு ஜோடிவெள்ளிக்கொலுசுகளை மட்டும் காசு கொடுத்து வாங்கிச்சென்றனர்.

இந்நிலையில் முசிறி குற்றத்தடுப்பு தனிப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது முசிறி கைகாட்டியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்த 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் பெண் போலீசை வரவழைத்து, அவர்கள் 2 பேரையும் சோதனை செய்தனர். அப்போது பெண்கள் அணிந்திருந்த உடையில் 15 ஜோடி வெள்ளிக்கொலுசுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அந்த பெண்கள், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த ராணி என்ற ஜான்சிராணி(வயது 32), தஞ்சாவூர் மாவட்டம், ஏலூர்ப்பட்டியை சேர்ந்த சாந்தி(50) என்பதும், முசிறி போலீஸ் நிலையம் எதிரில் உள்ள நகைக்கடையில் அவர்கள் கொலுசுகளை திருடியதும் தெரியவந்தது.

பின்னர் போலீசார் அந்த நகைக்கடைக்கு சென்று விசாரித்தபோது தான், கடை உரிமையாளருக்கே கொலுசுகள் திருட்டுப்போனது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கொலுசுகளின் மதிப்பு ரூ.51 ஆயிரம் என்பது தெரியவந்தது. இது குறித்து கடையின் உரிமையாளர் சந்தோஷ்குமார் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story