படவேட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


படவேட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 13 July 2019 11:00 PM GMT (Updated: 13 July 2019 6:23 PM GMT)

படவேட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் வருகிற 19-ந் தேதி தொடங்கி தொடர்ந்து 7 வாரங்கள் ஆடி வெள்ளி விழா நடக்கிறது. இக்கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சாலையோர கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்தனர். இதன் காரணமாக திருவிழா நடைபெறும் காலங்களில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

அதைத்தொடர்ந்து நேற்று காலை ஆரணி உதவி கலெக்டர் மைதிலி முன்னிலையில், நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் மித்தன், சாலை ஆய்வாளர் மற்றும் சாலைப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சிமெண்டு, தகர சீட்டுகள், கொட்டகைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.

சில கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா மற்றும் போலீசார் சமரசம் செய்தனர். மேலும் கடை வைத்துள்ள சிலர் தங்கள் கடைக்கு முன்பாக சாலையில் நடைபாதைக்கடைகள் அமைப்பவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் பெறுவதாக புகார் கூறப்பட்டது.

எனவே, இதனை தடுக்க சாலையின் இருபுறமும் பேரிகார்டு தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும். அப்போது தான் போக்குவரத்து நெரிசலின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது போளூர் தாசில்தார் ஜெயவேலு, ரேணுகாம்பாள் கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் அருள்குமார், கிராம நிர்வாக அதிகாரி மகாலிங்கம் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக போளூர் நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் மித்தன் கூறுகையில், ரேணுகாம்பாள் கோவிலில் ஆடி வெள்ளி விழாவை யொட்டி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கிறது. மேலும் ரேணுகாம்பாள் கோவிலில் ராஜகோபுரம் கட்டும் பணி நடக்கிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், ராஜகோபுரம் எதிரே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்யும் கடைகள் உள்ளது. அவைகளும் விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது ஏராளமான பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story