நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டது: நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது. இதனால் நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
நெல்லை,
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது. இதனால் நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஆனித்திருவிழா
வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. 8-ம் திருநாளான நேற்று காலை 7.30 மணிக்கு நடராஜர் வெள்ளை சாத்தியும், 8.30 மணிக்கு பச்சை சாத்தியும் வீதி உலா வருதல் நடந்தது. மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா வருதல், இரவு 10 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தேர்களை பார்வையிடும் நிகழ்ச்சி, சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்ககிளி வாகனத்திலும் வீதி உலா வருதல் நடந்தது.
நெல்லையப்பர் கோவில் நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கத்தில் நேற்று மாலை 4 மணிக்கு சென்னை சிவநாட்டியாலயா நடனப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், 5 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, பக்தி சொற்பொழிவும் நடந்தது. இரவு 8 மணிக்கு சங்கர சரசுவதி நிருத்யாலயா நாட்டியப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பாம்பே சாரதா ராகவ் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளுகின்றனர். காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை இழுக்கிறார்கள்.
நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகளுக்கு 5 தேர்கள் உள்ளன. நெல்லையப்பர் சுவாமி தேர் 450 டன் எடை கொண்டது. 28 அடி நீளமும், 28 அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய தேர் ஆகும். தேரோட்டத்துக்காக தேர் அலங்காரம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தேர்கள் ஒரே நாளில் நிலைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேரோட்டத்தை காண சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் நெல்லை வருவார்கள். மேலும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை காண வருவார்கள். ஆங்காங்கே ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 4 ரத வீதிகளிலும் நடமாடும் கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தீயணைப்பு வாகனங்கள், நடமாடும் மருத்துவ குழுக்களும் ரத வீதிகளிலும் நிறுத்தி வைக்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி, மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், ஆய்வாளர் கண்ணன், தக்கார் சங்கர், நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
பலத்த பாதுகாப்பு
தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் சரவணன் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதுதவிர 4 ரதவீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு தேரோட்ட நிகழ்ச்சிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story