வேடசந்தூர் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி


வேடசந்தூர் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 14 July 2019 4:30 AM IST (Updated: 14 July 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே, குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியாகினர்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. அவருடைய மகன் சிவக்குமார் (வயது 11). நாககோணனூரை சேர்ந்தவர் வெங்கடாசலம். அவருடைய மகன் அணைபிரபு (11). நண்பர்களான இருவரும் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் சிவக்குமாரும், அணைபிரபுவும் அவர்களுடன் படிக்கும் ஹரிஸ், பாலகுமரன் உள்பட 7 பேருடன் வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளனம்பட்டியில் உள்ள குட்டையில் குளிப்பதற்காக சென்றனர்.

பின்னர் குட்டையில் இறங்கி அவர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிவக்குமாரும், அணைபிரபுவும் ஆழமான பகுதிக்கு சென்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் தண்ணீரில் மூழ்கத்தொடங்கினர். இதைப்பார்த்த சக நண்பர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சல் போட்டனர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் சிவக்குமாரும், அணைபிரபுவும் தண்ணீருக்குள் மூழ்கினர். இதையடுத்து குட்டைக்குள் இறங்கிய பொதுமக்கள் தண்ணீருக்குள் மயங்கி கிடந்த இருவரையும் மீட்டு வெளியே கொண்டுவந்தனர். இதற்கிடையே 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்சில் வந்த மருத்துவ குழுவினர் மாணவர்களை பரிசோதனை செய்தனர். அப்போது நீரில் மூழ்கியதில் மூச்சுத்திணறி 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த மாணவர்களின் பெற்றோர் இருவரின் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரை கண் கலங்க வைத்தது. பின்னர் அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story