மதுரைக்கு செல்லும் குடிநீர் இரவு நேரங்களில் நிறுத்தம்: வைகை அணையில் இருந்து முறைகேடாக தண்ணீர் திறப்பு, முதல்-அமைச்சருக்கு ஊழியர்கள் புகார்


மதுரைக்கு செல்லும் குடிநீர் இரவு நேரங்களில் நிறுத்தம்: வைகை அணையில் இருந்து முறைகேடாக தண்ணீர் திறப்பு, முதல்-அமைச்சருக்கு ஊழியர்கள் புகார்
x
தினத்தந்தி 13 July 2019 10:45 PM GMT (Updated: 13 July 2019 7:43 PM GMT)

மதுரைக்கு செல்லும் குடிநீரை இரவு நேரங்களில் நிறுத்திவிட்டு, வைகை அணையில் இருந்து முறைகேடாக தண்ணீர் திறக்கப்படுவதாக முதல்-அமைச்சருக்கு பொதுப்பணித்துறை ஊழியர்கள் புகார் மனு அனுப்பி உள்ளனர்.

தேனி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 71 அடி. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 28.31 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 60 கன அடி வீதம் திறந்து விடப்படுகிறது.

குடிநீருக்கு திறக்கப்படும் தண்ணீர், அணை அருகே உள்ள ‘பிக்கப்‘ அணை என்ற இடத்தில் இருந்து குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் இங்கு தண்ணீர் திறப்பதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

தனியார் தோட்டங்களுக்கு செல்வதற்காக ஆற்றில் இரவு நேரங்களில் தண்ணீர் திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்ப ‘பிக்கப்’ அணை பகுதியில் உள்ள மதகு வழியாக தண்ணீர் வெளியேறிக் கொண்டே இருக்கிறது.

இதற்கிடையே வைகை அணையில் பணியாற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் சிலர், தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு ஒரு மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில், ‘மதுரைக்கு தண்ணீர் திறக்கும் மதகு இரவு நேரங்களில் முறைகேடாக அடைக்கப்படுகிறது. இதற்கு அதிகாரிகள் சிலர் உடந்தையாக உள்ளனர். பின்னர் தனியார் தோட்டங்களுக்கு செல்வதற்காக ‘பிக்கப்’ அணையில் உள்ள மதகு வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் மதுரை மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது, ‘இரவு நேரங்களில் தண்ணீர் முறைகேடாக திறக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ‘பிக்கப்’ அணையில் உள்ள மதகு சேதம் அடைந்து உள்ளதால் தண்ணீர் வெளியேறுவது தெரியவந்துள்ளது. அதை சரி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

வைகை அணையில் தண்ணீர் திறப்பது தொடர்பாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுந்து வருகிறது. எனவே, தண்ணீர் திறக்கும் மதகு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி முறைகேடுகள் நடக்காமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story