10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடக்கும் மதுரை-போடி அகல ரெயில்பாதை பணி; விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை


10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடக்கும் மதுரை-போடி அகல ரெயில்பாதை பணி; விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 July 2019 4:30 AM IST (Updated: 14 July 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

மதுரை-போடி அகல ரெயில்பாதை பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடித்து ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி,

ஆங்கிலேயர் காலத்தில் போடி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் விளையும் ஏலக்காய், மிளகு உள்ளிட்ட விளை பொருட்களை கொண்டு செல்வதற்காக மதுரை-போடி இடையே ரெயில்பாதை தொடங்கப்பட்டது. ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் இரண்டு மலைகளை குடைந்து ரெயில்பாதை அமைக்கப்பட்டது. இதையடுத்து தொடங்கப்பட்ட ரெயில் சேவையை பொதுமக்களும், அரசு அதிகாரிகளும், சுற்றுலா பயணிகளும் பயன்படுத்தி வந்தனர். இது கடந்த 2009-ம் ஆண்டு வரையில் மீட்டர்கேஜ் ரெயில் பாதையில் இயங்கி வந்தது.

கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு மீட்டர் கேஜ் பாதையாக இருந்த மதுரை-பாலக்காடு, மதுரை-போடி ஆகிய ரெயில் வழித்தடங்களை அகல ரெயில்பாதையாக மாற்ற முடிவு செய்தது. மேலும் அகல ரெயில்பாதை திட்டம் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து பல ஆண்டுகளாக மதுரை-போடி இடையே மீட்டர் கேஜ் பாதையில் இயங்கி வந்த ரெயில் சேவை கடந்த 2009-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. மேலும் பழைய மீட்டர் கேஜ் பாதைகள் அப்புறப்படுத்தப்பட்டது.

ஆனால் மதுரை-போடி அகல ரெயில்பாதை திட்டத்திற்கு போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. இந்த காரணத்தால், அகல ரெயில்பாதை திட்டம் மந்தமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெயில் சேவை நிறுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆனநிலையில் இன்னும் 50 சதவீத பணிகள் கூட முடியவில்லை. ஆண்டிப்பட்டி பகுதியில் பல இடங்களில் ரெயில்வே பாலம் கட்டும் பணி நிறைவடையவில்லை. ஆண்டிப்பட்டியில் உள்ள ரெயில்வே ஸ்டே‌‌ஷன், புதர்மண்டி காட்சியளிக்கிறது. டிக்கெட் கொடுக்கும் கட்டிடம் சிதிலமடைந்து காணப்படுகிறது.

புதிதாக அமைக்கப்பட உள்ள ரெயில்நிலைய கட்டுமான பணிகளும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. கணவாய் மலைப்பகுதியில் மீட்டர்கேஜ் பாதைக்காக குடையப்பட்ட மலையை அகலப்படுத்தும் பணி இதுவரை நடைபெறவில்லை. ஆனால் அகல ரெயில்பாதை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள், சிமெண்டு திட்டுகள், ரெயில் தண்டவாளங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த 2009-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட மதுரை-பாலக்காடு ரெயில்சேவை, அகல ரெயில்பாதையாக மாற்றப்பட்டு அந்த வழித்தடத்தில் மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டிலேயே ரெயில் சேவை இல்லாத மாவட்டமாக தேனி மாவட்டம் விளங்குகிறது. இந்த அகல ரெயில் பாதை அமைந்தால் வணிக பொருட்களை எடுத்து செல்லவும், மதுரையில் இருந்து பொருட்களை வாங்கி வரவும் ஏதுவாக இருக்கும். மேலும் மதுரை-போடிக்கு விரைவாக செல்ல முடியும்.

ஆனால் அகல ரெயில்பாதை திட்டம் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகிறது. ரெயில் நிறுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆனநிலையில், மத்தியில் இரண்டு முறை ஆட்சி மாற்றம் முடிவடைந்து தற்போது 3-வது முறையாக புதிய அரசு பொறுப்பேற்று உள்ளது. எனினும் தேனி மாவட்ட மக்களின் கனவான அகல ரெயில்பாதை திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. புதிதாக பதவியேற்று இருக்கும் பா.ஜனதா அரசு மதுரை-போடி அகல ரெயில்பாதை திட்டப்பணிகளை விரைந்து முடித்து அதை செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story